பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 110                                                                                            இதழ் - ௧௧0
நாள் : 02-06-2024                                                                          நாள் : 0௨-0௬-௨௦௨௪



சங்ககால ஔவை (கி.பி 2)


    சங்க இலக்கியங்களின் பாடுபொருளாகிய அகத்தையும் (காதலையும்) புறத்தையும் (வீரத்தையும்) பாடிய ஔவையினது புறப்பாடல்கள்வழி சில வரலாற்று நிகழ்வுகளையும் அவை நமக்குச் சொல்லும் படிப்பினையையும் பார்க்கலாம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவனும் குறுநில மன்னனுமான 'அதியமான் நெடுமான் அஞ்சி', தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது தற்போது ஒகேனக்கல் எனச் சொல்லப்படும் அருவியின் சங்ககாலப் பெயர் ஆகும்.

ஔவைக்கும் அதியமானுக்கும் இடையிலான நட்பு மிகவும் உன்னதமானதும் உயர்ந்ததும் ஆகும். தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு ஈந்த கதை அனைவரும் அறிந்ததே.  தமிழின் மீது அதியனுக்கு இருந்த அளவு கடந்த ‘பற்றும் அன்புமே’ அவனை அவ்வாறு செய்ய வைத்தது. ஔவை நீண்ட காலம் வாழ்ந்தால் நிச்சயம் அவள் தமிழினை வளர்ப்பாள்; மென்மேலும் தமிழுக்கு உரம் இடுவாள்  என்ற காரணமே.

தமிழ் மொழி மேல் அக்காலத்து மன்னர்களுக்கு இருந்த பற்று நிச்சயம் அக்காலக் குடிகளுக்கும் இருந்திருக்கும்.  தன் உயிரை விடத் தன் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த அதியனின் இச்செயல் மூலம் அவனது மொழிப்பற்று மாத்திரமன்றி ஔவையின் தமிழறிவும் வெளிப்பட்டது.   

(வரும் கிழமையிலும் ஔவை வருவாள்…)

இவ்வகைச் சிறப்பு வாய்ந்த புலவர்கள் பற்றி வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment