இதழ் - 175 இதழ் - ௧௭௫
நாள் : 21-09-2025 நாள் : ௨௧-௦௯-௨௦௨௫
ஒரு சமயத்தைச் சார்ந்தோர் மற்றோர் சமயத்தைச் சார்ந்தவரது இலக்கியத்தை படித்துச் சுவைத்து மனம் திறந்து பாராட்டி இன்புறுதலே உண்மையான ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடையே உண்டாகியுள்ளது என்பதற்குச் சான்று என்கிறார் மறைந்த மாமேதை அபுல் கலாம் ஆசாத் அவர்கள். இதனைத் தமிழகம் நிறைவேற்றி வருகிறது. கம்பராமாயணம் போலவே சீறாப்புராணமும் அனைத்துத் தமிழ் இலக்கிய செம்மல்களாலும் சுவைக்கப்படுவது சிறப்புக்குரியதாகும். காரணம் தமிழ்ச் சுவையே.
சிறந்த தமிழ் புலவரான உமறுப் புலவருக்குச் சீறாப்புராணம் எழுதுவதில் சிறிது தயக்கமும் இருந்தது. காரணம் இவர் எழுதத் தலைப்பட்ட சீறாப்புராணத்தின் கதாநாயகர் இறைத்தூதர் ஆவார். அவருடைய சொல்லும் செயலும் ஏற்கனவே வரலாறாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவரது எழுத்து மிகையாகி அதன் மூலம் இவருக்கு இன்னலும் ஏற்பட்டு விடக்கூடாது. அதே நேரம் சுவைபட நபிகள் நாயகத்தின் வரலாற்றை சொல்லவும் வேண்டும் இப்படியான சிக்கலுக்குள் தள்ளப்பட்டார் உமறுப் புலவர்.
சீறாப்புராணத்தில் தமிழ் மணம்
நபிகள் நாயகத்தின் வரலாறு அரேபிய நாட்டில் பாலைவனத்தில் நடந்திருந்தாலும் அதனை தமிழ்நாட்டில் நடந்த மாதிரியான நாட்டு வர்ணனை மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ் புலவரான உமறுப் புலவர் தமிழின் பண்பாடு, சுவை என்பன மாறாமல் எழுதியிருப்பார். அரேபிய பெண்களைத் தமிழ்ப் பெண்களாகச் சித்தரித்துத் தென்பாண்டிய நாட்டுக் குலவையொலியுடன் நகரின் சிறப்பினையும் அழகு தமிழில் வர்ணித்து எழுதியிருப்பார்.
"திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த
மருவினும் மருவாய் அணுவினுக்(கு) அணுவாய்
மதித்திடாப் பேரொளி அனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத்(து) உறைந்த பல் உயிரின்
கருவினும் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே"
இப்பாடலினைப் பிரித்துப் படித்தோமானால் பொருள் சுவையினைச் சுவைக்கலாம்.
செல்வங்களிலேயே செல்வமாகவும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான பொருளாகவும் அனைத்திற்கும் மேலான தெளிவாகவும் மிகத் துல்லியமான அறிவாகவும் மணங்களில் மணமாகவும் அணுக்களை உருவாக்குபவனாகவும் எவராலும் முழுமையாக மதிப்பிட முடியாதவனுமான இறைவன். எங்கும் எதிலும் எப்பொருளிலும் உணர்விலும் உள்ளவன் இறைவன் என்பதனை மிக மிக அழகாக இப்பாடல் மூலம் எடுத்துக்காட்டி இருப்பார் தமிழ்ப் புலவரான உமறுப்புலவர்.
வாய்ப்புக் கிடைக்கும் போது, சீறாப்புராணத்தைச் சுவையுங்கள். தமிழ் அமுதத்தைப் பருகுங்கள்.
வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்...
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment