பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 35                                                                இதழ் -
நாள் : 25-12-2022                                                    நாள் : - - ௨௦௨
 
 
 
பெயர்ச்சொல்லின் வகைகள்
தொழிற்பெயர்
     ஒருவினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
சான்று
  • படைத்தல், காத்தல், பாடுதல்
 
தொழிற்பெயரின் வகைகள் 
     விகுதிபெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழில்பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயர், உடன்பாட்டுத் தொழிற்பெயர், எதிர்மறைத் தொழிற்பெயர் என்று பலவகைகள் உண்டு.
 
விகுதிபெற்ற தொழிற்பெயர் 
     வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதிபெற்ற தொழிற்பெயர் ஆகும். தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, வி, வு, உள், காடு, இ, மதி, து, மை, அடம், ஆனை, அரவு, வான் முதலிய விகுதிகளுள் ஏற்ற ஒன்றைப் பெற்று வருவது விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
சான்று
  • தல்     - செய்தல்
  • அல்    - ஆளல்
  • சி       - உணர்ச்சி
  • வு      - நினைவு
 
முதனிலைத் தொழிற்பெயர்
     விகுதி பெறாமல் வினை பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.
சான்று
  • அடி, உரை, குட்டு
     இதில் அடித்தல் உரைத்தல் குட்டுதல் ஆகிய தொழிற்பெயர்களின் பகுதிகள் மட்டும் தொழிற்பெயராகி நிற்கின்றன. முதனிலையே தொழிற்பெயராக நிற்பதால் இவை முதனிலைத் தொழிற்பெயர்களாகும்.
 
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
  • சூடு - சுடு சுடுதல்
  • பேறு - பெறு பெறுதல்
  • கேடு - கெடு கெடுதல்
     இவை விகுதி பெறாமல் முதனிலைத் திரிந்து வரும் தொழிற்பெயர்கள் ஆகும்.
 
உடன்பாட்டுத் தொழிற்பெயர்
  • உடன்பாட்டுப் பொருளில் வருவது உடன்பாட்டுத் தொழிற்பெயர் ஆகும்.
சான்று
  • செய்தல், வணங்கல், நடத்தல்
 
எதிர்மறைத் தொழிற்பெயர்
     எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.

சான்று

  • செய்யாமை, வணங்காமை, நடவாமை, கொல்லாமை

தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment