பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 76                                                                                       இதழ் - 
நாள் : 08-10-2023                                                                          நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
கோட்டை
 
    கோட்டை என்பது அரணைக் குறிப்பதற்கு வழங்கப்படும் பெரும்பான்மையான சொற்களில் ஒன்று. முற்காலத்தில் மண்ணால் அமைந்திருந்த கோட்டைகளும், பிற்காலத்தில் கல்லாற் கட்டப்பட்ட கோட்டைகளும் இன்றும் பல இடங்களில் காணப்படுகின்றன. பாண்டி நாட்டில் நிலக்கோட்டை என்பது ஓர் ஊரின் பெயர். அங்குப் பாளையக்காரன் ஒருவன் கட்டிய மட்கோட்டை இன்றும் உள்ளது. நிலக்கோட்டையின் அருகே சிறு மலையின் சாரலில் குலசேகரன் கோட்டை என்னும் ஊர் உண்டு. பாண்டி மன்னனாகிய குலசேகரன் பெயரை அக்கோட்டை தாங்கி நிற்கின்றது. இன்னும், நிலக்கோட்டைக்கு அண்மையிலுள்ள மற்றொரு கோட்டை தொடியன் கோட்டை என்று பெயர் பெற்றுள்ளது. வடுகர் இனத்தைச் சேர்ந்த தொட்டியத்தலைவன் ஒருவன் அக்கோட்டையைக் கட்டுவித்தான் என்பர்.
 
    மதுரையைச் சேர்ந்த திருமங்கலத்துக்கு அண்மையில் கீழக்கோட்டை, மேலக்கோட்டை, நடுக்கோட்டை என மூன்று கோட்டைகள் அமைந்துள்ளன. தொண்டைமான் குலத்தினர் ஆளும் நாடு புதுக்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது. தொண்டைமான் ஆட்சியைத் தோற்றுவித்த அரசர் இரகுநாதன் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், புதிதாக ஒரு கோட்டை கட்டி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயரிட்டார். அவர் காலத்தில் அது தலைநகரமாகச் சிறந்திருந்தமையால், அக்கோட்டையின் பெயரே நாட்டின் பெயராயிற்று.
 
    இன்றும், செங்கோட்டை, அருப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை, தேவ கோட்டை, தலைவன் கோட்டை, உக்கிரன் கோட்டை, கோட்டைப் பாளையம்,  முதலிய ஊர்ப் பெயர்களில் கோட்டை என்னும் சொல் அமைந்திருக்கக் காணலாம்.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment