இதழ் - 134 இதழ் - ௧௩௪
நாள் : 17- 11 - 2024 நாள் : ௧௭ - ௧௧ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
பெண்ணானவள் தன் வாழ்நாளில் பலவிதமான சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லி வைத்துள்ளது சமூகம். கற்பினைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துக் கொள்ளவும் ஒழுக்கத்துடன் வாழவும் கூறியுள்ள சமூகத்தில் பெண்ணின் ஒழுக்கம் என்பது அனைவரது பேசுபொருளாக இன்றுவரை உள்ளது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆனால் ஔவை பெண்ணின் ஒழுக்கம் சம்பந்தமாக ஒரு செய்தியினை இந்த சமூகத்தின் காதுகளில் மாத்திரமன்று புத்தியிலும்படுமாறு சொல்கிறார். ஆண், பெண் பேதமின்றி பக்கம் சாராத்தன்மையுடன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
ஔவை என்றால் புதுமை அல்லவா! ஔவை என்பவள் நம் தமிழ் சமூகத்தின் அடையாளம் ஆவார்.
நல்லார்கள் எல்லாரும் நல்லவரே தன்மையால்
வல்லாராற் கேடு படாராயின் - நல்லறி
வாண்மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண்டீரும்
மாண்பு கெடுக்கா விடின்.
இப்பாடல் மூலம் அறிந்து கொள்ளப்படுவது யாதெனில்,
பெண்ணானவள் தனது கற்பு நெறியைப் பேணிப் பாதுகாப்பதற்கு ஆணின் ஒழுக்கமும் ஒத்துழைப்பும் அவசியம் என்கிறார் ஔவை. அதாவது ஆண்கள்தாம் பெண்களுக்குக் கேடு செய்கின்றனர். இக்கேட்டினால் கெட்ட பெயரை அடைவது பெண்களே.ஆனால் ஆண்கள் நல்லவர் என்ற பெயரினை இயல்பாகப் பெற்று விடுகின்றனர். ஆண்களால் கெடுக்கப்படாதவராக இருந்தால் பெண்கள் நல்லவர்களாக இருக்க முடியும். அவர்கள் தம்கற்பைப் பேணுவது என்பது ஆண்களைப் பொறுத்ததே என விளக்குகிறார்.
இதை மட்டும் கூறவில்லை ஔவை ,மேலும் கூறுகிறார்.
அறிவும் முயற்சியும் ஆற்றலும் உடைய ஆண்களது குணநலத்தினை, அதன் தன்மையினைப் பெண்கள் கெடுக்காமலிருக்க வேண்டும். ஆண்கள் பெண்களின் இச்செய்கையால் மயங்கி அவர்கள் பேச்சைக் கேட்டு பெண் பித்தராகிவிடக் கூடாது எனவும் ஔவை எச்சரிக்கிறார்.
இவ்வாறு பெண்களின் கற்பழிவுக்கு ஆண்களையும், ஆண்களின் அறிவுச்சிதைவுக்குப் பெண்களையும் கூறியுள்ளார் ஔவை.
பக்கச்சார்பற்று அறிவுரை வழங்கிய தமிழ் புலவர்களில் ஒருவரான ஔவையினைப் போற்றி நாமும் அவர் வழியைப் பின்பற்றுவோம்.
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment