பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 17                                                              இதழ் -
நாள் : 21-8-2022                                                  நாள் : --௨௦௨௨

  

      சென்ற இதழில் மலைப்பகுதியான குறிஞ்சி நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்களைப் பார்த்தோம். இந்த இதழில் காட்டுப்பகுதியான முல்லை நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள் குறித்து பார்ப்போம்.

முல்லை நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள் 
    பழங்காலத்தில் தமிழ்நாட்டில் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகக் கருதப்பட்டது. அந்நிலம் முழுவதும் காடும் வனமுமாக அமைந்திருக்கும். பெரும்பாலான நகரங்கள் காட்டை அழித்தே உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறே வனத்தில் சில பகுதிகளை அகற்றி கோயில்களும் கட்டப்பட்டிருந்தன. பழங்காலத்தில் சிதம்பரம் தில்லைவனம் என்றும், மதுரை கடம்பவனம் என்றும், திருநெல்வேலி வேணுவனம் என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

     முல்லை நிலம் சார்ந்த இடம் காடு, காவு, பொழில், சோலை, தண்டலை, தோப்பு, சுரம், ஆரண்யம், பாடி, பட்டி, மந்தை போன்றன பெயர்களால் குறிக்கப்பட்டது. இவை காட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான அல்லது உருவாக்கப்பட்ட இடப்பெயர்கள் ஆகும்.

காடு
     ஆர்க்காடு, ஆலங்காடு, வேற்காடு, வெள்ளியங்காடு, களக்காடு என்னும் காட்டுப்பகுதிகள் இருந்துள்ளன. அவற்றிலிருந்து அப்பகுதிகள் ஊார்ப் பெயர்களாக பிற்காலகட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன.

     காடு என்னும் சொல்லில் தமிழக ஊர்ப்பெயர்கள் நிறைய உள்ளன. தொண்டை நாட்டில் திருவாலங்காடு, பழவேற்காடு (கருவேல மரங்கள் நிறைந்த பழமையான இடம்), சோழ நாட்டில் தலையாலங்காடு (பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்த இடம்), சேலத்தின் அருகிலுள்ள ஏற்காடு (ஏரியும் ஏரியை ஒட்டி அழகிய காடும் உள்ள இடமாதலின் ஏரிக்காடு என்று வழங்கப்பட்டு பிற்காலத்தில் ஏற்காடு என்றானது), நெல்லைப் பகுதியில் களக்காடு முதலியன குறிப்பிடத்தக்கன.

காவு
     கா என்ற சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயிரங்காவு என்னும் ஊர் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் திருத்தண்கா, சோழ நாட்டில் திருமாலின் தலமான காவனம்பாடி முதலிய ஊர்ப்பெயர்கள் கா, காவு இடப்பெயர்களான வழங்கிவருவதை அறியலாம். 

( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

 

No comments:

Post a Comment