இதழ் - 107 இதழ் - ௧0௭
நாள் : 12-05-2024 நாள் : ௧௨-0ரு-௨௦௨௪
மகேந்திரன்
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன் மகேந்திரப் பல்லவன். அவன் பெயர் வட ஆர்க்காட்டிலுள்ள மகேந்திரவாடி என்னும் ஊரால் விளங்குவதாகும். அவ்வூரில் திருமாலுக்குக் கோயில் கட்டியும், குளம் வெட்டியும் பணி செய்தான் மகேந்திரன். அவ்வூர் முன்னாளில் பெரியதொரு நகரமாக இருந்துள்ளது. அந்நாளில் மகேந்திர வாடியின் கீழ வீதியாயிருந்த இடம், இப்பொழுது தனியூராகக் கீழவீதி என்னும் பெயரோடு அதற்குக் கிழக்கே மூன்று மைல் தூரத்திற் காணப்படுகின்றது.
குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில் ஆக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் மகேந்திரன் காலத்தில் எழுந்தது என்பர். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய அண்ணல் வாயில் என்னும் சித்தன்ன வாசல் குகை கோவிலில் அவன் காலத்துச் சிற்பமும் ஓவியமும் சிறந்து விளங்குகின்றது.
இன்னும், பல்லவ மன்னர் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களில் ஒன்று சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரம் ஆகும். முற்காலத்தில் பல்லவபுரம் என்றழைக்கப்பட்டு இன்று பல்லாவரம் என மருவியுள்ளது. அங்குள்ள குகைக் கோயிலில் மகேந்திரவர்மன் விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருத்தலால் அஃது அப்பல்லவன் காலத்தில் எழுந்த ஊர் என்பது வெளிப்படுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment