இதழ் - 162 இதழ் - ௧௬௨
நாள் : 22 - 06 - 2025 நாள் : ௨௨ - ௦௬ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
“கணிசமான தமிழர்கள் ஆரம்பப்பள்ளிக்குப் பிறகு தூரனைப் பற்றி எதையுமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று ஜெயமோகன் எழுதியதைப் படித்தபொழுது, தமிழனாக மட்டுமல்லாது தமிழிலக்கியம் படிப்பவனாக மிகுந்த அலமலக்குற்றேன். காரணம் பள்ளியில்கூட தூரனைப் படித்ததாக நினைவில் இல்லை. கல்லூரியிலும்தான். குழந்தை இலக்கியம், அறிவியல், இசைப்பாடல், இதழியல், உளவியல், நாடகம், சிறுகதை, கவிதை, திறனாய்வு எனப் பல்துறைகளில் தமிழுக்குப் பணிசெய்து கிடந்தவர். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபொழுது எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவரைப் பார்க்கச் சென்றாராம். அப்பொழுது சு.ரா.விடம் கண்ணீர் மல்க தூரன் சொல்லிய சொற்கள் இவை. “நான் செத்தால் ரேடியோவிலே கூட சொல்ல மாட்டாங்களே ராமசாமி”. தமிழ்மொழிக்கென கலைக்களஞ்சியம் கண்ட ஓர் ஆளுமை தன் இறுதிக் காலத்தில் தமிழுலகத்தால் புறக்கணிக்கப்பட்டார் என்பது எத்தனை பெரிய குற்றச்செயல் என்பதை உணர்கிறேன். தூரன் போற்றிய முருகன் எனக்கு அவரைப் படிக்கும் வாய்ப்பை இப்பொழுதாவது தந்தனனே என்று மகிழ்கிறேன்.
ம. ப. பெரியசாமித் தூரன் கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷன் வித்யாலத்தில் ஆசிரியராகவும், தலைமையாசியரியராகவும் 1933 முதல் 1947 வரை தொண்டாற்றினார். அக்காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பல அவரது நினைவுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. பெ.தூரனின் நினைவுக்குறிப்பின்வழி வெளிப்படும் வித்யாலயத்தைக் காட்சிப்படுத்த இவ்வெழுத்துக்கள் முயல்கின்றன. தொடக்கத்தில் தூரனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கிடையாது. நாட்குறிப்பு எழுதுவது என்பது தற்பெருமையாக முடியும் என்ற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது. அதனைப் போக்கி அவரை நாட்குறிப்பு எழுதுவதற்குத் தூண்டியவர் திரு. பி. என். ஸ்ரீனிவாசாச்சாரியார் ஆவார். வைணவ இலக்கியத்திலும் விசிட்டாத்துவிதத் தத்துவத்திலும் தேர்ந்தவரான பி. என். ஸ்ரீனிவாசாச்சாரியாரைக் கலைக்களஞ்சியப் பணிக்காகப் பலமுறை தூரன் நேரில் சென்று பார்த்துவந்தார். “என்ன குழந்தாய், நீ எப்போது வேண்டுமானாலும் சலியாமல் வருகிறாய். இவற்றையெல்லாம் நீ ஒரு நாட்குறிப்பில் (Diary) விடாமல் உனது அனுபவங்களாக எழுதிக்கொண்டுவா. பின்னால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும்” என்ற அவரது தூண்டுதல் எத்தனைப் பெரிய வரலாற்றுப் பண்டாரத்தை நமக்கு அளித்துள்ளது என்பதை ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள் நூலை வாசிப்போர் உணர்வர். (பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி வெளியீடு).
என்கடன் பணிசெய்து கிடப்பதே
வித்யாலயம் அப்பொழுது போத்தனூரில் இயங்கி வந்தது. ஏழை எளிய மக்களுக்குக் கல்வியை அளிக்கும் நோக்கத்தில் காந்தியப் பற்றாளரான தி.சு.அவினாசிலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனத்திற்கு வருவதற்கு முன்பு தூரன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வைரவிழாப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஆசிரியப் பணியில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தாலும் உயர்ந்த குறிக்கோளுடைய நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அவரது விழைவு. அப்பொழுதுதான் தி.சு. அவினாசிலிங்கம் அவர்களும் நிதியமைச்சராக விளங்கிய திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும் தூரனைப் பார்த்து வித்யாலயத்திற்கு அழைத்தனர். இராமகிருஷ்ண வித்யாலயத்தின் குறிக்கோள்களைக் கேட்ட தூரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வித்யாலய ஆசிரியப் பணியில் சேர்நதார். பிராமணனும் ஹரிஜனனும் ஒன்று என்னும் தத்துவத்துடன் இயங்கும் நிறுவனத்தில் பணிபுரியப் போகும் எண்ணமே அவருக்கு உளநிறைவையும் தொண்டுள்ளத்தையும் அளித்துள்ளது எனலாம். பழைய பள்ளியிலிருந்து பணித்துறப்பு செய்துவிட்டுப் புறப்படுவதற்கு முன்பு, அங்கு தான் சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் சாலையில் வீசியெறிந்துவிட்டுப் புறப்பட்டதாக அவரது நினைவுக்குறிப்பு குறிப்பிடுகிறது. வித்யாலயம் என்றால் தொண்டுள்ளம் கொண்ட நிறுவனம் என்னும் எண்ணம் பரவலாக இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
தூரன் வித்யாலயத்திற்கு வருவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியும் பத்திரிக்கைகளில் வெளியிட்டும் வந்துள்ளார். சமூகத் தொண்டு என்னும் குறிக்கோள் கொண்ட வித்யாலயம் தொடங்கப்பட்ட காலத்தில் பணிக்கு வந்தவர் தூரன். எனவே வித்யாலயத்தின் வளர்ச்சியில் அவர் மிகுந்த கவனம் கொள்ள வேண்டியிருந்தது. அதன்பொருட்டுத் தனது எழுத்துப்பணியை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பது என்று முடிவு செய்து அதன்படியே நின்றார். அவரது நண்பரான திரு. கல்கி (பொன்னியின் செல்வன் நாவலின் ஆசிரியர்) எவ்வளவோ சொல்லியும் இந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கவேயில்லை. படைப்புள்ளம் கொண்ட ஓர் எழுத்தாளன் இத்தகைய முடிவில் நிலைநிற்றல் என்பது அத்துணை எளிதல்ல. தூரனின் தியாகம் வித்யாலய வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை அளித்தது என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்றது.
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment