இதழ் - 183 இதழ் - ௧௮௩
நாள் : 29 - 11 - 2025 நாள் : ௨௯ - ௧௧ - ௨௦௨௫
சி.வை. தாமோதரம் பிள்ளை
( 1832 - 1901 )
தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் புத்தூர் அருகே சிறுப்பிட்டி என்ற கிராமத்தில் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி 1832 ஆம் ஆண்டில் பிறந்தார்.
சி.வை.தாமோதரம் பிள்ளை தொடக்க காலத்தில் கிறித்தவராக இருந்தவர். இவரது கிறிஸ்தவப் பெயர் வின்ஸ்லோ கிங்ஸ்பரி. பின்னாளில் அவர் சைவத்திற்கு மாறினார் (யாழ்ப்பாணத்தில் கல்வி, வேலை ஆகியவற்றின்பொருட்டு பெயரளவே கிறிஸ்தவர்களாக இருக்கும் வழக்கம் அன்று இருந்தது).
பழந்தமிழ் நூல்களை சுவடிகளில் இருந்து அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்களில் ஒருவரான இவர் எழுத்தாளர், உரைநடையாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், தமிழார்வலர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் என்னும் நூலை உரை எழுதி வெளியிட்டார் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி வாரப்பத்திரிகையில் சி.வை.தாமோதரம்பிள்ளை உதவியாசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைப் பணியுடன் பர்னல் பண்டிதர், வால்டர் எலியட், லூஷிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்தார். சென்னையில் மிரன் வின்ஸ்லோ நடத்தி வந்த அமெரிக்க மதராஸ் மிஷன் அமைப்பின் அகராதிப்பணிகளுடன் தொடர்புகொண்டிருந்தார் இவர் கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்து, சென்னை ராஜதானி கல்லூரியில் தமிழ்ப்பண்டிதராக பணியமர்ந்தார்.
1857 இல் சென்னைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது இவர் மாணவராகச் சேர்ந்தார். 1858 இல் அப்பல்கலைகழகத்தின் முதல் இரு பட்டதாரிகளில் ஒருவராக பி.ஏ. படிப்பை முடித்தார். அப்போது சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு வயது 25.
வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்த இவர் தன் இறுதி காலங்கள் முழுவதும் பதிப்பகப் பணியிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டார். இவர் அரசு தனக்குக் கொடுத்த ஓய்வூதியம் முழுவதையும் ஆய்வுப்பணிக்கே செலவழித்தார். நூல்களைப் பதிப்பிக்க வசதியான இடமாகவும் வக்கீல் தொழில் செய்ய ஏதுவாகவும் இருந்ததால் ஓய்வுபெற்ற பின்பு கும்பகோணத்தில் தங்கினார்.
தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர் என்ற பெருமையை உடையவர்.
வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்...
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020

No comments:
Post a Comment