இதழ் - 186 இதழ் - ௧௮௬
நாள் : 28 - 12 - 2025 நாள் : ௨௮ - ௧௨ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 186
' ஒருவர் பொறை இருவர் நட்பு '
விளக்கம்
இரண்டு நண்பர்களில் ஒருவர் செய்த பிழையை மற்றொருவர் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
' ஒருவர் பொறை இருவர் நட்பு '
உண்மை விளக்கம்
தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும்
எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
'ஒருவர் பொறைஇருவர் நட்பு'.
இரண்டு நண்பர்கள் நட்பு கொண்டிருக்கையில் இருவரில் ஒருவர் தவறென்று அறியாமலேயே சில சமயங்களில் பிழைசெய்திருக்கலாம். அவ்வாறு ஏற்பட்ட பிழையை பெரிது படுத்தாமல் நண்பர்கள் பொறுமை கொள்ள வேண்டும். அதைவிடுத்து கடிந்து கொண்டால் அவர்களுக்கிடையேயுள்ள நட்பு கெடும். நட்பில் பிழை பொறுத்தல் இல்லாத போது அது நிலைக்காது என்பதைக் குறிக்கவே 'ஒருவர் பொறைஇருவர் நட்பு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment