இதழ் - 166 இதழ் - ௧௬௬
நாள் : 20 - 07 - 2025 நாள் : ௨௦ - ௦௭ - ௨௦௨௫
இலக்கணம் கற்போம்
பொருள் இலக்கணம்
அகப்பொருள்
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது.
இதில் ஆணை தலைவன் என்றும், பெண்ணை தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை என்பது மரபு.
அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது.
ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும்.
துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment