பக்கங்கள்

தேவார மொழி

இதழ் - 187                                                                                 இதழ் - ௧
நாள் :  04 - 01 - 2026                                                             நாள் :  0 - 0 - ௨௦௨




தோடுடைய செவியன் - 4

    வியாக்கிரபாதரின் மகனான உபமன்னியு முனிவருக்கு சிவபெருமான் பாலூட்டினார் என்பதால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சிவபெருமான் புலிக்குட்டிக்குப் பாலூட்டினார் என்றார். உமையம்மை சிங்கக்குட்டிக்குப் பாலூட்டினார் என்றது எக்காரணம் கொண்டு?

    தேவாரம் பாடிய மூவருள் முதலாமவரான திருஞானசம்பந்தர் தலங்கள்தோறும் சென்று பதிகம் பாடி வைசத்தையும் தமிழையும் மக்கள் வழக்கில் நிலைநிறுத்தினார். சைவத்தையம் தமிழையும் நிலைநிறுத்தினார் என்பதைக் கொண்டு பிற சமயங்களை வென்று நிலைநிறுத்தினார் என்னும் உட்கருத்து பெறப்படுகிறது.  

    மதுரையில் பாண்டிய மன்னர் நெடுமாறன் முன்னிலையில் சமணர்களை அனல்வாது புனல்வாது செய்து வென்றார் என்பது சேக்கிழார் தரும் செய்தி. மதுரை முழுவதும் சமண சமயம் கோலோச்சிக் கொண்டிருந்த பொழுதில் அதனை மாற்றி சைவத்தை நிலைநிறுத்த விரும்பிய அரசர் நெடுமாறனின் மனைவியும் பாண்டிமாதேவியுமான மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். அவரும் மதுரைக்கு வருகைதந்து மன்னருக்கு ஏற்பட்ட வெப்புநோயை திருநீறுபூசி குணமாக்கினார். அதனால் வெகுண்ட சமணர்கள் வாதுக்கு அழைக்கு அரசர் முன்னிலையில் அனல்வாது, புனல்வாது நிகழ்ந்தது. அதில் சமணர்கள் தோற்றனர். அரசர் நெடுமாறனும் சைவரானார். மதுரை சைவ நிலமானது. 

    மதுரையில் சமணர்களை வென்றதைப் போலவே நாகப்பட்டினத்தில் உள்ள போதிமங்கை என்னும் இடத்தில் திருஞானசம்பந்தர் தேரர்களான புத்தர்களை வாதில் வென்றார் என்கிறார் சேக்கிழார். மதுரை சமணர்களின் செல்வாக்கு மிக்க பகுதியாக இருந்ததைப் போலவே போதிமங்கை பௌத்தர்களின் செல்வாக்குமிக்க பகுதியாக இருந்துள்ளது என்பதை “சாக்கியர்தம் போதி மங்கை” என்னும் அவர்தம் புராணச் சொற்கள் எடுத்துரைக்கின்றன. போதிமங்கையில் உள்ள புத்தமடத்தின் ஆளுமைகளுள் ஒருவர் புத்தநந்தி என்பவர். சிவச்சின்னங்களின் ஒலியுடன் கூடிய திருஞானசம்பந்தரின் வருகை அங்கிருந்த புத்த துறவிகளுக்கு ஒவ்வாமையை விளைவிக்க அவர்கள் புத்தநந்தியின் மூலம் திருஞானசம்பந்தரை எதிர்த்தனர். புத்தநந்தி வாதுக்கு அழைக்க திருஞானசம்பந்தர் அதற்கு உடன்பட்டார். திருஞானசம்பந்தரின் பாடல்களை ஏட்டில் எழுதுபவர் சம்பந்த சரணாலயர் என்பவர். அவர் வெகுண்டசொன்ன சொல்லால் புத்தநந்தியின் தலையில் இடிவிழுந்தது என்று குறிப்புப்பொருள் தொணிக்க சேக்கிழார் திருஞானசம்பந்தரின் புராணத்தை எழுதிச் செல்கிறார். 

    இங்ஙனம் சைவ சமயத்திற்கு மாற்றுச் சமயங்களாகக் கருதப்பட்ட சமணத்தையும் பௌத்தத்தையும் வாதில் வென்று சைவத்தை நிலைநிறுத்தியவர் என்பதால் திருஞானசம்பந்தரை ‘பரசமயக்கோளரி’ என்று குறிப்பர். 

“………………………..சைவ ரெல்லாம்
    ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
    பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
 பரசமய கோளரிவந் தான்என் றூத”

என்று சேக்கிழார் திருஞானசம்பந்தரின் போதிமங்கை வருகையைச் சொல்லும்பொழுது குறிப்பிடுகிறார்.

“ வயற்புகலித்
        தாளரிக் கும்அரி யானருள் பெற்ற பரசமய கோளரி” (பா.54)

என்று ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியிலும்,

“செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
 கழுமல நாதன் கவுணியர் குலபதி
 தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
 பண்டிதர் இன்பன் பரசமய கோளரி” (பா.37)

“பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
 பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே” (பா.24)

“பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன் மிகு
    பரசமய வென்றி அரிதன்
சலமலி தரும்கமல சரண் நினைவன் என்றனது
    தகுவினைகள் பொன்றும் வகையே” (பா. 5)

என்று ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்திலும் திருஞானசம்பந்தர் பரசமயக் கோளரி என்று அழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

(அறிவோம்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment