இதழ் - 191 இதழ் - ௧௯௧
நாள் : 15 / 02 / 2026 நாள் : ௧௫ / 0௨ / ௨௦௨௬
திருஞானசம்பந்தர், சீர்காழியில் சிவபெருமான் ஆணைப்படி உமையம்மை ஞானப்பால் புகட்ட உவமையிலாக் கலைஞானம் யாவும் வாய்க்கப்பெற்று தனது முதற்பதிகத்தை அருளினார். அது ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. அப்பதிகத்தின் இரண்டாது சொல் ‘விடையேறி’ என்பது. திருஞானசம்பந்தரின் முதற்பதிகத்தோடு இச்சொல்லை இணைத்துப் பார்க்கும்பொழுது இதன் பயன்பாட்டின் தேவையை உணர முடிகிறது.
தோணியப்பர் கோயிற்குளக்கரையில் கடைவாயில் பாலொழுக நின்ற திருஞானசம்பந்தரிடம் தந்தையான சிவபாத இருதயர் “யார் பால் கொடுத்தது?” என்று கேட்டதற்கு சிவபெருமானின் வருகையையும் தோற்றத்தையும் கூறி அவர் அடையாளப்படுத்தினார். அதுவே அவரது முதற்பதிகம். அதில் சிவபெருமான் விடைமேல் வந்து அருளினான் என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் பதிகத்திற் பெய்த சொல்தான் ‘விடையேறி’ என்பது. விடை என்றால் என்ன? யார் விடையாக ஆனது? சிவபெருமான் ஏன் விடைமீது ஏறியிருக்கிறார்? என்பன போன்ற வினாக்களை திருஞானசம்பந்தரின் இச்சொல் நம்முள் எழும்பச் செய்கிறது. அதற்கு விடைதெரிய ‘விடை’ குறித்த புராணச் செய்திகளையும் சமூகவியல், மெய்யியல், மொழியியல் கருத்துகளையும் அறிந்துகொள்வது துணைசெய்யும்.
சிவபெருமான் திருமேனிகொண்டு அருள்பாலிக்கும் திருக்கோயில்களில் அவருக்கு எதிரே அவரையே நோக்கமாகக் கொண்டு ஒரு காளை வடிவ உயிரி ஒன்று அமர்ந்திருக்கும். சிவபெருமானே அதன் நோக்கம். சிவபெருமானின் அருளுக்காக பொறுமையாகவும் தீவிர ஏக்கத்துடனும் அமர்ந்திருக்கும் உயிரி அது. அதனையே சைவ சமயம் விடை என்றும் நந்தி என்றும் பலவாறாக அழைக்கின்றது. மேலும் நந்தியே முதற்குரு என்றும் சிவனூர்தி என்றும் வாயிலதிகாரி என்றும் சிவனது அடையாளக் கொடி என்றும் குறிப்பிடுகிறது. தவமுனி ஒருவரின் மகன்தான் விடையானார் என்பது சைவப் புராணங்களின் கூற்று. யார் அந்த முனிவர்? அவர் மகன் எங்ஙனம் இங்ஙனம் ஆனார்?
இன்னும் அறிவோம்…
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment