பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 16                                                              இதழ் -  
நாள் : 14-8-2022                                                   நாள் : --௨௦௨௨

    
     சொற்கள் அனைத்தும் எழுத்தொலிகளால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கவேண்டும். இதற்குச் சொற்களின் முதலிலும் இறுதியிலும் ஒலிக்கும் எழுத்தொலிகள் காரணமாக அமைகின்றன.
 
     மொழிக்கு முதலில் எல்லா எழுத்துகளும் வருவதில்லை. இன்னின்ன எழுத்துகள்தான் மொழிக்கு முதலில் வரவேண்டும் என்று இலக்கண நூலார் விதிகள் வகுத்துள்ளனர். அவ்வாறு வரும் எழுத்திற்கு முதல்நிலை எழுத்துகள் அல்லது மொழி முதல் எழுத்துகள் என்று பெயர்.

மொழி முதல் எழுத்துகள்  - 22
 
     பன்னீர்உயிரும் கசதந பமவய
     ஞங ஈரைந்து உயிர்மெய்யு மொழிமுதல்
                                  -  நன்னூல் நூற்பா எண். 102

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் (12) சொல்லின் முதலில் வரும்.
  • மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து (10) மெய் எழுத்துகளின் வரிசைகள் உயிர் மெய்வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.

மொழி முதலில் உயிர் எழுத்துகள்
  • அம்மா, ஆடு, இலை, ஈகை, உலகு, ஊசி, எருது, ஏர், ஐயம், ஒன்று, ஓடம், ஔவை.

மொழி முதலில் மெய் எழுத்துகள்
  • – கல் கால் கிளி கீரி குகன் கூற்று கெடுதல் கேடு கை கொக்கு கோன் கௌவை

  • -  ங் என்னும் மெல்லினமெய்  'விதம்' எனப் பொருள் தரும். 'ஙனம்' என்னும் சொல்லில் மட்டுமே முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது. அ, இ, உ என்ற சுட்டெழுத்துகளுடனும் எ, யா என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙகனம், இங்ஙகனம், உங்ஙனம், யாங்ஙகனம், எங்ஙகனம் என்று வரும். தற்காலத் தமிழில் இவ்வெழுதின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.

  • - சடை, சாலை, சிரிப்பு, சீர், சுடுதல், சூடு, செலவு, சேர், சைகை, சொல், சோர்வு, சௌக்கியம்.

  •   - ஞமலி, ஞாலம், ஞெகிழி (கொள்ளிக்கட்டை)

  • - தந்தை, தாய், திணை, தீமை, துணை, தூண், தென்னை, தேன், தையல், தொன்மை, தோல், தௌவல் ( கெடுதல்).

  • - நன்றி, நாடு, நிலம், நீர், நுனி, நூல், நெல், நேர்மை, நைந்து, நொச்சி, நோக்கம், நௌவி.

  • - பல், பாடு, பிஞ்சு, பீடு, புவி, பூ, பெண், பேதை, பையன், பொன், போதல், பௌர்ணமி.

  • - மண், மான், மின்னல், மீன், முளை, மூளை, மெய், மேன்மை, மையம், மொட்டு, மோனை, மௌனம்

  • - யமன், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம் .

  • - வருகை, வாடல், விளைவு, வீணை, வெல், வேலை, வையகம்


மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
  • ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு (8) மெய்யெழுத்துகளின் வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.
  •  அதேபோல ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

     இவ்விலக்கண வரையறைகள் அனைத்தும் எழுத்துமொழிக்கானவையே அன்றி, பேச்சுமொழிக்கானவை அல்ல. மேற்காட்டிய 22 எழுத்துகள் நீங்கலாக உள்ள பிற மெய் எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் அவை தமிழ்ச்சொற்களாக இருக்கமாட்டா; பிறமொழிச் சொற்களாகவோ, ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கும்.
 
( தொடர்ந்து கற்போம் . . . )

 

தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment