பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 18                                                              இதழ் -
நாள் : 28-8-2022                                                  நாள் : --௨௦௨௨

 
ஆத்திசூடி வெண்பா – 16
 
ஆத்திசூடி (ஔவை)
சனி நீராடு
 
உரை
     சனிக்கிழமைதோறும் தவறாது எண்ணெய்பூசி நீராடு

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 16
     ஞாயிறு உயிர்க்கீறு திங்கள் நம்பர் அருள்செய்கிலர் செவ்
     வாய்பிணி துக்கம் குருநாள் வாழ்வுபோம் – தூயவெள்ளி
     போடிதெல்லாம் புன்னைவன பூபாலா மிக்கபுத
     னோடு சனி நீராடு

உரை
     புன்னைவன பூபாலனே! ஞாயிறன்று எண்ணெய்பூசி நீராடுதல் உயிர்க்கு இறுதிபயக்கும், திங்கள் இறையருள் கிடைக்காது. செவ்வாய் நோயையும் துக்கத்தையும் அளிக்கும். வியாழன் வாழ்வு செழிக்காது. வெள்ளி பாழ். எனவே மிக நல்ல நாட்களான புதன்கிழமையும் சனிக்கிழமையும் எண்ணெய்பூசி நீராடு.
 
விளக்கம்
     நீராடுதல் என்பது இங்கு எண்ணெய் பூசி நீராடுதலாகும். எண்ணெய் குளியலுக்கு உகந்த நாட்களையும் ஏனைய நாட்களில் எண்ணெய் குளியல் ஏற்படுத்தும் தீவிளைவுகளையும் மரபில் சொல்லியும் எழுதியும் வலியுறுத்தியும் வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உயிர்க்கு நல்லதல்ல என்பதை உயிர்க்கீறு என்றார். 
 
     நம்பர் – இறைவன். “திருநல்லூரில் நம்பர்பால் மேவுற்ற திருப்பணிகள்” (பெரியபுராணம், திருநா.புரா. பா. 197) என்பது சேக்கிழார் குறிப்பு. குரு – வியாழன். தேவர்களின் குருவான பிருகஸ்பதி திட்டையில் கோயில்கொண்டுள்ள இறைவனை வணங்கி நவக்கிரக நிலையைப் பெற்றார் என்பது புராணம். அவரே வியாழன் என்றும் குரு என்றும் அழைக்கப்படுகிறார். வெள்ளி நாட்களில் நல்லது என்பதை ‘தூய’ என்ற அடையால் சுட்டினார். ஆனால் எண்ணெய்க் குளியலுக்கு உகந்ததல்ல.

கருத்து
     புதன்கிழமையும் சனிக்கிழமையும் எண்ணெய்பூசி நீராடு என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 

No comments:

Post a Comment