இதழ் - 112 இதழ் - ௧௧௨
நாள் : 16 - 06 - 2024 நாள் : ௧௬ - 0௬ - ௨௦௨௪
சோழ நாட்டு மன்னர்
பராந்தகன்
தஞ்சைச் சோழ மன்னர் ஆதிக்கத்திற்கு அடிப்படை கோலியவன் பராந்தக மன்னன். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரியணை யேறிய இம்மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புரிந்தான். பாண்டிய மன்னனை இருமுறை வென்று, மதுரையைக் கைப்பற்றினான். மாற்றானுக்கு உதவி செய்த இலங்கை மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்று ஈழ நாட்டையும் கைக்கொண்டான்.
இவ்வரசனது விருதுப் பெயர்களில் ஒன்று வீரநாராயணன் என்பதாகும். ஆர்க்காட்டு நாட்டில் வீரநாராயணபுரம் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் சில உண்டு. அவை வீராணம் என வழங்கும். தென்னார்க் காட்டிலுள்ள வீராணத்தேரியும் இவன் பெருமையை விளக்குவதாகும்.
மதுரையை வென்று கைப்பற்றிய இம் மன்னனுக்கு மதுராந்தகன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இக்காலத்தில் செங்கற்பட்டு நாட்டில் சிறந்து விளங்கும் மதுராந்தகம் என்ற ஊர் இவனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம் ஆகும். இவ்வூர் கடப்பேரி என்னும் பழமையான ஊரின் அருகே எழுந்தது ஆகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment