இதழ் - 59 இதழ் - ௫௯
நாள் : 11-06-2023 நாள் : ௧௧-0௬-௨௦௨௩ தலை, இடை, கடை
இன்றும் ஊர்களின் அமைப்பைக் கருதி, தலை, இடை, கடை என்னும் அடைமொழிகள் அவற்றின் பெயரோடு சேர்த்து வழங்கிவருவதுண்டு. தலையாலங்கானம், தலைச்செங்காடு என்னும் பாடல்பெற்ற ஊர்களின் பெயரில் தலையென்னும் அடைமொழியைக் காணலாம். சேலம் நாட்டில் தலைவாசல் என்பது ஓர் ஊர். தஞ்சையில் தலைக்காடு என்னும் ஊரும், ஆர்க்காட்டில் தலைவாய் நல்லூர் என்னும் ஊரும் காணப்படுகின்றன. அதேபோல நீலகிரியில் தலைக்குந்தா, ஒன்னதலை ஆகிய ஊர்களும் இவ்வாறு பெயர் பெற்றுள்ளன.
இடையென்னும் அடைமொழியைக் கொண்ட ஊர்களில் மிகப் பழமை வாய்ந்தன திருவிடைமருதூர், திருவிடைச்சுரம், இடையாறு முதலியனவாம். இவை மூன்றும் தேவாரப் பாடல் பெற்றுள்ளன. இடைக்காடு என்ற ஊரிலே பிறந்த புலவர் ஒருவர் இடைக்காடர் என்று பண்டை இலக்கியத்தில் பேசப்படுகின்றார்.
அரிசில் ஆற்றுக்கும் திருமலைராயன் ஆற்றுக்கும் இடையேயுள்ள ஊர், இடையாற்றங் குடி என்னும் பெயர் பெற்றுள்ளது. இன்னும், இடையென்று பொருள்படுகின்ற நடு என்னும் சொல், நெல்லை நாட்டிலுள்ள நடுவக்குறிச்சி, சோழ நாட்டிலுள்ள நடுக்காவேரி முதலிய ஊர்களின் பெயரில் அமைந்திருக்கக் காணலாம். அதேபோல நடுவட்டம், நடுஹட்டி முதலிய ஊர்கள் இவ்வாறு பெயா்பெற்றவையே.
இதேபோல கடையென்னும் அடையுள்ள ஊர்ப் பெயர்களும் சில உண்டு. சேலம் நாட்டிலுள்ள கடைக் கோட்டூரும், தென் ஆர்க்காட்டிலுள்ள கடைவாய்ச் சேரியும், நெல்லை நாட்டிலுள்ள கடையமும் இதற்கு எடுத்துக்காட்டாகும். மேலும் கடைக்கோடு, கடைசோலை முதலிய ஊர்ப்பெயா்கள் இங்கு நினைக்கத்தக்கன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment