பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 22                                                                   இதழ் -
நாள் : 25-09-2022                                                     நாள் : -௦௯- ௨௦௨௨

 
 ஆத்திசூடி (ஔவை)
 
தந்தைதாய்ப் பேண்

உரை
ஈன்றெடுத்த தந்தையையும் தாயையும் எப்பொழுதும் பாதுகாத்து வருக.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் – 20

     அனையிடர்தீர்த் தான்கருடன் அந்தணன் செங்கந்தை
     தனையெடுத்துச் சாவு தவிர்த்தான் – இனையவர்போற்
     சீராரும் புன்னைவன தீரனே நாடோறும்
     பேராருந் தந்தைதாய்ப் பேண்.

உரை
     சிறப்புடைய புன்னைவன தீரனே! கருடன் தாயின் அஞர் நீக்கினான். அந்தணனாம் செங்கந்தை தனையெடுத்துத் தாயின் இறப்பைத் தவிர்த்தான். இவர்களைப் போல நீயும் நாள்தோறும் பெருமையுடைய தந்தை தாயைப் பாதுகாத்தல் வேண்டும்.

விளக்கம்
     அனை என்பது அன்னை. இடர் – துன்பம், அஞர். இனையவர்போல் – இவர்களைப்போல் சீர் – புகழ், பெருமை. தந்தை தாய் மக்களைப் பேணாவிடினும்  மக்கள் அவர்களைப் பேணவேண்டும் என்பதும் கருத்து. தந்தை தாயைப் பேணாமல் ஒருவன் தன்னைப் பேணிக்கொள்ளுதல் கூடாது என்ற உட்கருத்தும் இதனுள் அடங்கியிருத்தல் காண்க. எத்தனை துன்பம் வந்தாலும் தந்தை தாயைப் பேணுதல் வேண்டும் என்பதை கருடன், செங்கந்தை கதைகளால் எடுத்துக்காட்டினார்.

கருடன் கதை
     காசிப முனிவருடைய மனைவியர்களுள்ளே கத்திரு என்பவள் அநந்தன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடன், அருணன் என்னும் இருவரையும் பெற்றாள். ஒருநாள் இவ்வினதை கத்திரு என்னும் இருவரும் ஓரிடத்திலே இருக்கும்போது அங்கே இந்திரனுடைய உச்சைச்சிரவம் என்னுங் குதிரை வந்தது. அக்குதிரையின் வாலைக் கத்திரு பார்த்து கருமை என்று கூற வினதை வெண்மை என்றாள். இவ்வாறு இருவரும் முரணி எவள் வார்த்தை மெய்ம்மையாகுமோ அவளுக்கு மற்றவள் அடியாளாகக்கடவள் எனச் சபதமுங் கூறினர். பின்னர்க் கத்திரு தன்மகனாகிய கார்க்கோடன் என்னும் பாம்பினால் அவ்வாலைச் சுற்றிக் கருமையாக்குவித்துக் காண்பித்து வினதையைத் தனக்கடிமையாக்கினாள். பின்னர்க் கருடன் அமுதங்கொண்டுவந்து கத்துருவின் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தாயாகிய வினதையின் அடிமையை நீக்கினான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

     ஆத்திசூடி வெண்பா கூறும் செங்கந்தை அந்தணன் கதை என்னவென்று புலப்படவில்லை.

கருத்து
     ஈன்றெடுத்த தந்தை தாயை எந்தச் சூழநிலையிலும் பாதுகாக்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment