இதழ் - 107 இதழ் - ௧0௭
நாள் : 12-05-2024 நாள் : ௧௨-0ரு-௨௦௨௪
தமிழ்ப்புலவர் அறிவோம்
தமிழமுத வாசகர்களுக்கு வணக்கம்!
பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றான தமிழ், இன்றளவும் எழுத்தும் பேச்சும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மொழிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. தமிழ் மொழியினைத் தம் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்கள் தமிழர்கள் எனப்படுவர். இம்மொழியில் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு (2500) ஆண்டுகள் பழமை வாய்ந்த இலக்கியங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிந்துவெளி நாகரிகத்தின் உண்மைத்தன்மை, சமீபத்திய கீழடி ஆய்வுகளின் முடிவுகள் தமிழின் சிறப்பையும் பெருமையையும் பழமையும் உலகுக்கு உணர்த்துவன ஆகும்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதத்தாயின் பழமையை,
"என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்"
என்ற அடிகள் வாயிலாகக் குறிப்பிடுவது தமிழ்த்தாய்க்கும் பொருத்தமாக இருக்கும்.
மேலும் இவர்,
" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் "
என ஏறத்தாழ ஏழு மொழிகளை அறிந்திருந்த இவர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
பாவேந்தர் உயிரை விட மேலானது தமிழ் என்பதை,
" தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கும் நேர்"
எனக் கூறுகிறார்.
இந்திய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக இருக்கிறது என்பது சிறப்புக்குரியதாகும். இந்திய மொழிகளிலே முதல் முதலில் அச்சேறிய மொழியாகத் தமிழே இருந்துள்ளது என்பது பெருமைக்குரியதாகும்.
உலகத்திலேயே பக்தி இலக்கியங்கள் அதிகமாகக் காணப்படுகின்ற முதல் மொழியாகத் தமிழ்மொழி இருக்கிறது என அ.ச. ஞானசம்பந்தம் தனது "பெரிய புராணம் ஒரு ஆராய்ச்சி" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழின் பெருமையைச் சிறப்பினைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ்மொழியில் உள்ள இலக்கியங்கள் வாயிலாகவே தமிழின் பழம்பெருமையையும் சிறப்பினையும் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ் இலக்கியங்களை நமக்குக் கொடுத்த புலவர்கள் பற்றிச் சுருக்கமாக வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment