இதழ் - 152 இதழ் - ௧௫௨
நாள் : 06 - 04 - 2025 நாள் : ௦௬ - ௦௪ - ௨௦௨௫
குறிஞ்சிப் பாட்டு
சங்கத் தமிழ் நூல் தொகுப்பில், பத்துப்பாட்டில் அடங்கியது.
இது கபிலர் என்னும் புலவரால் பாடப்பட்டது. 261 அடிகளாலான இப்பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றுள்ளது. இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.
ஆரிய அரசன் பிரகத்தன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டு, தமிழரின் களவுநெறியைத் தீது என்றான். இது கற்புநெறியில் முடியும்; மிகவும் நல்லது; என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த குறிஞ்சித்திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து கபிலர் பாடியதே இந்நூல்.
மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குளிர்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன. குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இந்தக் குறிஞ்சிப்பாட்டின் களம் குறிஞ்சிநிலமாகும்.
இல்லறம் என்ற நல்லறம் சிறப்பாக இருந்தால் வாழ்வு சிறக்கும். தமிழரின் இல்லறம் என்ற நல்லறம் பற்றி ஆரிய அரசனுக்கு எடுத்துக் கூறும் வண்ணம் பாடப்பட்டதே குறிஞ்சிப்பாட்டு. குறிஞ்சிப்பாட்டில் வரும் தலைவன் யானையை எதிர்க்கொண்டு, தன் வீரத்தைத் தான் விரும்பும் தலைவிக்குப் புலப்படுத்துகிறான்.
இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 99 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் இணைந்து அந்தப் பூக்களைப் பறித்துப் பாறைமீது குவித்து விளையாடியதாக இந்தப் பாடலில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. இக்கால மக்களின் வாழ்வியல் பற்றி மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.
வரும் கிழமையும் கபிலர் வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment