பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 117                                                                                          இதழ் - ௧௧
நாள் : 21- 07 - 2024                                                                        நாள் :  - 0 - ௨௦௨௪


ஔவை (கி.பி -2)

ஔவையும் அதியனும்


     அதியமான் நெடுமான் அஞ்சி, ஔவை இவர்களது வரலாற்றுச் செய்திகள் மூலம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு , அதன் மேன்மை என்பன பற்றி அறிந்து கொள்ளலாம். 

     அரசன்,விறலி என்ற நிலையில் இல்லாமல் இருவரும் சமமானவர்களாக இருந்துள்ளனர். இவர்களிடையே உயர்வு, தாழ்வினை இவர்களது நட்பு  ஏற்படுத்தவில்லை. அதே நேரம் ஔவை அதியனுடனான தனது நட்பினைத் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஒரு உறவாகப் பாசப் பிணைப்பாகக்  கூறுகிறார். (புறநானூறு 92)                            

     அதியனின்  வீரச்சாவினால் மனம் நொந்து நிலைகுலைந்து  இருந்த ஔவை, கபிலர் போலவோ பிசிராந்தையார் போலவோ இந்த உலகை விட்டுச் செல்லவில்லை.காரணம் அதியன்  கொடுத்த  நெல்லிக்கனி. அதியனின் ஆசைப்படி தமிழை வளர்ப்பதற்காக தன்னுயிரினைப் பற்றியிருந்தாள் என்று கூடக் கூறலாம்.

புகழத் தெரிந்த ஔவை இகழவும் யோசிப்பது இல்லை. சான்றாக வரலாற்றுச் செய்தி, 

     ஒரு சமயம் பாணர்  குழு‌ புரவலரை காணச் சென்றனர். அக்குழுவில் ஔவையுமிருந்தாள். வழியில் ஓரிடத்தில் தங்கி உணவு சமைக்கத் தொடங்கினர். தோட்டத்திலே கீரை பறித்தனர். கீரையுடன் சேர்த்து சமைப்பதற்கு தேவையான அரிசி இல்லை. ஆகவே அரிசியினைக் கேட்டு நாஞ்சில் வள்ளுவன்பால் சென்றபோது, அவன் அவர்களது தேவையை விளங்கிக் கொள்ளாமல் தனது நிலைக்கு ஏற்றவாறு ஒரு யானையைப் பரிசளித்தானாம்.

“தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
         மடவன் மன்ற செந் நாப் புலவீர்!
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
         அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினேமாக தான் பிற   
         வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
         பெருங் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
         போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?   ( புறநானூறு - 140 )

     உண்ணுவதற்காக அரிசி  கேட்டால் அவன் தன் பெருமையைப் பறைசாற்ற ஓர் ஆனையைக் கொடுத்துள்ளான்.   இதனைத் 'தேற்றா ஈகை'  என்கிறாள்  ஔவை. தேவையறிந்து அதற்கேற்ற மாதிரி நாம் பிறருக்கு வழங்க வேண்டும் என்பதனை குறிப்பிடுகிறார்.


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment