தமிழ் வளர்த்த செவ்வேள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை வாழ்வு முதன்மை பெற்றிருந்த சங்க காலந்தொட்டே முருக வழிபாடு தமிழ்நிலத்தில் மக்கள் வழக்காக இருந்துள்ளது. சங்க கால இலக்கியங்கள் இதற்குச் சான்று. மக்கள் முருகப்பெருமானை பல்வேறு வடிவங்களில், குணங்களில் வைத்து வழிபட்டாலும் அன்றுதொட்டு இன்றுவரை அவரைத் தமிழுடன் தொடர்புபடுத்தி 'தமிழ்க்கடவுள்' என்று குறிப்பிடுவது பெருவழக்கம். தமிழ்ச் சங்கங்களில் தமிழாய்ந்த புலவர்களுள் ஒருவராக சங்க நூல்கள் அவரைக் குறிப்பிடுகின்றன.
“பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே” என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படை கூறுகிறது.
“பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும் நீயே” என்கிறது கல்லாடம்.
“தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே” என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுகிறார்.
தமிழில் பெருங்காதல் கொண்டவர் முருகப்பெருமான் என்பதை இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுச் சொல்கின்றன.
“நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே!
கெழீஇக் கேளிர் சுற்றம் நின்னை
எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே”
என்கிறது பரிபாடல். அதாவது அடியார்களின் தமிழ்ப் பாட்டை மிக விரும்பிக் கேட்பவன் முருகப்பெருமான் என்பதை இந்தப் பரிபாடல் அடிகள் உறுதிசெய்கின்றன.
தம்மை வாழ்த்திப் பாடுபவர்களுக்கு மட்டுமல்ல, தமிழால் தம்மைத் திட்டிப் பாடுபவர்களுக்கும் அருள் வழங்கச் செய்யும் அளவிற்கு அவரது தமிழ்க்காதல் இருக்கிறது. கந்தரலங்காரத்தில் ஒரு சான்று.
“மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்”
என்று கந்தரலங்காரம் முத்தமிழ் முருகனின் தமிழ்க்காதலை விதந்தோதுவதை தமிழன்பர்கள் கண்டு இன்புறலாம். இந்தச் சொற்களை நாம் உள்ளத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். தமிழால் வைதாரையே வாழவைப்பார் என்றால், தமிழால் அவரைப் போற்றி வணங்கினால் என்னென்ன நற்பேறுகளை வழங்குவார் என்று நினைக்கவோ சொல்லவோ நம்மால் ஆகாது.
தமிழோடு முருகப்பெருமானைத் தொடர்புபடுத்தி இலக்கியங்கள் கூறும் செய்திகள் ஏராளம் உள்ளன. அவையாவும் முருகப்பெருமானின் தமிழ்க்காதலை பல்வேறு நிலைகளில் விளக்கி அவரைத் தமிழ்க்கடவுள் என்று நிறுவுவன.
ஒருசமயம், தமிழ்ப்புலவர் குழுவுள் தாமும் புலவராய் இருந்து தமிழ்ப்பா இயற்றுவார். மற்றொரு சமயம் புலவர்களுடன் வாதுசெய்து தமிழ்விளக்கம் அளிப்பார். ஒரு சமயம், தமிழ்ப்புலவர்களின் உள்ளத்தில் சொல்லருளி தம்மைப் பாடச் செய்வார். மற்றொரு சமயம், தமிழ்ப்புலவர்களுக்கு நோயருளி, அந்நோய் தீரத் தமிழ்ப்பாடல் பாடச் செய்து மகிழ்வார். இங்ஙனம் எண்ணற்ற நிகழ்ச்சிகளை முருகப்பெருமானின் தமிழ்க்காதலுக்குச் சான்றாகக் காட்டலாம்.
இத்தனையையும் இங்கு குறிப்பிட்டுக் காட்டுவதன் நோக்கம், முருகப் பெருமான் வேறு, தமிழ் வேறு அல்ல என்பதைச் சொல்வதற்கேயாகும். முருகப் பெருமான் தமிழ் வளர்த்ததும் அவர் வளர்த்த தமிழ், இலக்கியங்களாக உருப்பெற்று பக்தியை வளர்த்ததும் எண்ணி மகிழத்தக்கவை.
இத்தகைய தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் தமிழ்நாட்டில் மனிதராய்ப் பிறந்து தமிழ்வளர்த்த வரலாறு மெய்யன்பர்கள் அனைவரும் அறிய வேண்டியது. அருணகிரிநாதர் அதனைத் தமது திருப்புகழிலும் கந்தரந்தாதியிலும் பாடிப்பாடி இன்புறுகிறார். அத்தகைய போற்றுதலுக்குச் சொந்தக்காரர் வேறுயாருமல்ல.
சீர்காழியில் பிறந்து, மூன்று வயதில் உமையம்மையிடம் ஞானப்பாலுண்டு, உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் யாவும் கைவரப்பெற்று, திருத்தலப் பயணம் செய்து, தெருவெங்கும் திருநெறிய தமிழ்முழக்கம் செழிக்கச் செய்த திருஞானசம்பந்தரே அத்தகைய போற்றுதலுக்குரியவர். அவர் செய்த அருட்செயல்களை முருகப்பெருமான் செய்தவை என்று சொல்லும் வழக்கத்தை இலக்கியங்களில் காணலாம். முருகப்பெருமானே தேவாரம் அருளிய திருஞானசம்பந்தராகப் பிறந்து தமிழ்வளர்த்தார் என்பது ஆன்றோர் சொல்.
(தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment