பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 55                                                                                           இதழ் -
நாள் : 14-05-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
    
 
வினைச்சொல் வகை
   வினைகளின் அடிப்படையில் வினைச்சொல்லை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,
    1. வினைமுற்று,
    2. வினையெச்சம் என்பனவாகும்.

வினைமுற்று
     பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை வினைமுற்று அல்லது முற்றுவினை என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
 
    'பிறிதோர் சொல்லோடு இயையாது தானே தொடராதற்கு (வாக்கியமாதற்கு) ஏற்கும் வினைச்சொல் முற்று' என்பார் சேனாவரையர்.
 
    வினைமுற்றானது,
  •     தெரிநிலை வினைமுற்று
  •     குறிப்பு வினைமுற்று     என இரண்டு வகைப்படும்
  
தெரிநிலை வினைமுற்று
 ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று ஆகும்
 
சான்று
ஓவியன் சுவரில் சித்திரம் தீட்டினான்.
இத்தொடரில் தீட்டினான் என்பது வினைமுற்று.
    செய்பவன்    -     ஓவியன்
    கருவி        -    தூரிகை வண்ணம்
    நிலம்         -    சுவர்
    செயல்       -    தீட்டுதல்
    காலம்       -    இறந்தகாலம்
    செய்பொருள் -     சித்திரம்
 
    இவ்வாறு காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரியநிற்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று ஆகும்.
 
“செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறுந் தருவது வினையே”  (நன்னூல். நூற்பா.எண். 320)
 
    தெரிநிலை வினைமுற்று உடன்பாட்டு வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று என இரண்டு நிலைகளில் வரும்.
 
 
உடன்பாட்டு வினைமுற்று
    செயல் நிகழ்வதைக் காட்டும் வினைமுற்று உடன்பாட்டு வினைமுற்று.

சான்று
    கண்ணன் கதை எழுதினான்.
    ‘எழுதினான்’ என்பது உடன்பாட்டு வினைமுற்று.


எதிர்மறை வினைமுற்று
 செயல் நிகழாமையைக் குறிக்கும் வினைமுற்று எதிர்மறை வினைமுற்று.
 
சான்று
    கண்ணன் கதை எழுதிலன்.
    ‘எழுதிலன்’ என்பது எதிர்மறை வினைமுற்று.
 
     இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment