பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் -  50                                                                                                     இதழ் - ௫0
நாள் : 09-04-2023                                                                                        நாள் : 0௯-0௪-௨௦௨௩


 
 
வாயில்
 
 
வாயில்
      அகம் என்னும் சொல்லுக்கு உட்புறம் என்று பொருள்.  இச்சொல் முதலில் வீட்டுக்கு வாயில் என்பது இல்லின்வாய், வீட்டின்வாய் என்று பொருள்படும். வாயிலும் சில ஊர்ப்பெயர்களில் வழங்கக் காணலாம். கோச் செங்கட் சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக் குடவாயில் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்தான் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. குடவாயில் என்னும் பாடல் பெற்ற பழமையான ஊர் தஞ்சையில் உள்ளது. சேர நாட்டை ஆண்ட செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோ என்னும் செந்தமிழ்ச் செல்வர் துறவறம் பூண்டு, வஞ்சி மாநகரின் குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்து அருத்தவம் புரிந்தார் என்று அவர் வரலாற்றால் அறிகின்றோம். அக்குணவாயில் பிற்காலத்தில் ஓர் ஊராயிற்று.
 
   தஞ்சையில் மேலவாசல் என்னும் ஓர் ஊர் மன்னார்குடிக்கு அருகே அமைந்திருக்கின்றது. சேலத்தில் தலைவாசல் என்னும் ஊர் காணாப்படுகின்றது. புதுக்கோட்டைச் சாசனங்களில் பெருவாயில் நாடு, சிறுவாயில் நாடு, வடவாயில் நாடு என்னும் ஊர்ப் பெயர்கள் வருகின்றன. அவற்றுள் பெருவாயில் நாடு இக்காலத்தில் பெருமாநாடு என வழங்குகின்ற தென்பர். இன்னும் அன்ன வாயில், புன்னை வாயில், காஞ்சி வாயில் முதலிய ஊர்ப்பெயர்கள் கல்வெட்டுகளிலே காணாப்படும். கொற்ற வாயில் என்னும் பெயருடைய ஊர்களும் ஆங்காங்கு உள்ளன. மன்னனுக்குரிய மாளிகையின் தலைவாயில், பெரும்பாலும் கொற்ற வாசல் என்னும் பெயரால் குறிக்கப்படுவதாகும். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் கொத்தவாசல் என்ற ஊரும், வடமதுரைக் கருகே கொத்தவாசல் சேரி என்ற சிற்றூரும் உண்டு.
 
    தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் பெயரோடு சேர்ந்து பில்வாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந்நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. இன்று இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment