சென்ற வாரம் நாடு பற்றி அறிந்தோம். இந்த வாரத்தில், மக்கள் பல்வேறு தொழில் மற்றும் காரணங்களுக்காக குடியேறிய சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கப்பெற்று வருகின்றன.
நாட்டின் தலைமை சான்ற இடம் நகரம் அல்லது தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்களாயின.
ஆழ்வார்களிற் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம் பெயர் ஆகும். பின்னாளில் அப்பெயர் மருவி ஆழ்வார் திருநகரியாகத் திகழ்கின்றது. அதேபோல பாண்டிய நாட்டிலுள்ள விருதுப்பட்டி என்னும் ஊர் வணிகத்தால் வளர்ச்சியடைந்து, இன்று விருதுநகராக விளங்குவதைக் காணலாம்.
இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன. சென்னையின் அருகே எழுந்துள்ள தியாகராய நகரமும். காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றியுள்ள கணபதி நகரமும் இவ்வாறு பெயர் பெற்ற நகரங்களுக்குச் சான்றுகளாகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment