பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 19                                                                     இதழ் -  
நாள் : 04-09-2022                                                      நாள் : ௦௪-௦௯- ௨௦௨௨


 

ஆத்திசூடி (ஔவை)

ஞயம்பட உரை

உரை

     உன்னிடத்தில் விரும்பம் இல்லாதவர்களுக்கும் விருப்பம் உண்டாகும் விதமாக இனிமையாகப் பேசு.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 17

      தொட்டடித்தோ னன்றிசெய்த தூயோ னிருவருக்கும்
      பட்டணத்துப் பிள்ளை பகர்ந்ததுபார் – மட்டுலவுந்
      தென்பாகைப் புன்னைவன தீரனே யாரிடத்தும்
     அன்பாய் ஞயம்பட வுரை

உரை

     தேனுலவும் சோலைகள் நிறைந்த தென்பாகை என்னும் ஊரையாளும் தீரனாகிய புன்னைவன நாதனே! தொட்டு அடித்த ஒருவனுக்கும் நன்றிசெய்த தூய உள்ளம் படைத்த ஒருவனுக்கும் பட்டினத்தார் பகர்ந்த சொற்களை உற்றுப்பார். அதனால் யாரிடத்தும் அன்புபொழியும் சொற்களை மட்டுமே அவர்கள் விரும்புமாறு இனிமையாகப் பேசு.

விளக்கம்

     மட்டு – தேன், நறுமனம் என்று பொருள். தேனும் நறுமணமும் நிறைந்த மலர்கள் விளங்கும் சோலை என்று கொள்க. தீரன் – மனவுறுதியுள்ளவன். பட்டணத்துப்பிள்ளை – சித்தர் வரிசையில் வைத்து வணங்கப்படும் பட்டினத்தார். பதினோராந் திருமுறையில் வெண்காட்டடிகள் என்று குறிப்பிடப்படுபவரும் இவரே என்பாரும் அன்றென்பாரும் உளர். பட்டினத்தாரை அடித்தவனை தொட்டடித்தான்  என்றார். நன்றி செய்த – நன்மை செய்த. தூயோன் – நன்னெஞ்சு கொண்டவன். ஞயம் – இனிமை

பட்டணத்துப்பிள்ளை கதை

    பட்டணத்துப் பிள்ளையார் சிவத்தல பயணமாகப் பல நாடுகளுக்கும் சென்று கொங்கு நாட்டிற்கு வந்தபொழுது ஒரு நாள் நள்ளிரவில் பசியினால் இடருற்று மூர்க்கன் இல்லம் என்று அறியாமல் அவன் வீட்டு வாயிலிலே நின்ற கையேந்தினார். அவன் இவர் ஒரு சிவயோகி என்று அறியாமல்  யாரோ தீயோன் என்றெண்ணி விரைந்துவந்து தடியினால் அடித்தான்.  அடிக்கும்பொழுது பிள்ளையார் தான் நின்ற நிலையினின்று பெயரவில்லை. சிவ சிவ என்று சிவமந்திரம் ஓதினார். அப்பொழுது அண்டை வீட்டுப் பறத்திண்ணையில் படுத்துக்கிடந்த கிழவன் ஒருவன் ஓடிவந்து ஆம்மூர்க்கனை நோக்கி “ஏடா! பேதையே! இவர் ஒரு சிறந்த சிவயோகி! இவருக்கு ஏன் இத்தீங்கு செய்தாய்?” என்று விலக்கிப் பிள்ளையாரை அழைத்துக் கொண்டுபோய் அன்போடு உண்பித்து பெரிதும் உபசரித்தான். அப்பொழுது பட்டினத்துப் பிள்ளையார் திருவருளை நினைத்து “பூணும் பணிக்கல்ல” எனத் தொடங்கும் பாடலையும், “இருக்கும் இடம்தேடி” எனத்தொடங்கும் பாடலையும் பாடினார்.

(இக்கதை இலங்கைப் பதிப்பில் கண்டவாறு)

பட்டினத்தார் பாடிய பாடல்கள் பின்வருமாறு:

பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும் படிக்கல்ல மங்கையர்க்கல்ல நற்காட்சிக்கல்ல
சேணுங் கடந்த சிவனடிக்கல்ல என் சிந்தை கெட்டுச்
சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே !

இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.

 

கருத்து

     யாரிடத்தும் அன்புடன் அவர்கள் விரும்பும் விதமாக இனிமையாகப் பேச வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

 

No comments:

Post a Comment