இதழ் - 192 இதழ் - ௧௯௨
நாள் : 22/ 02 / 2026 நாள் : ௨௨ / 0௨ / ௨௦௨௬
தேவாரம் முதலிய சைவ இலக்கியங்களும் புராணங்களும் புகழும் நந்திதேவர், முனிவர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர். அவர் பெயர் சிலாதர் என்பது. அவர் யார் என்பதை சிறிது அறிமுகம் செய்துகொண்டு அவர் எங்ஙனம் நந்திதேவருக்குத் தந்தையானார் என்று காண்போம்.
சிலா என்றால் கல் என்று பொருள். கல்லால் அமைக்கப்பட்ட தோரணவாயிலை சிலாதோரணம் என்று சொல்வார்கள். இந்த முனிவருக்கு சிலாதர் என்று ஏன் பெயராயிற்று? புராணத்தில் சில காரணங்கள் காணப்படுகின்றன. ஒருமுறை இவர் எமலோகத்தைக் காணும் வாய்ப்பைப் பெற்றார். எமலோகத்தின் பல்வேறு காட்சிகளை சித்திரகுப்தரின் துணைகொண்டு கண்டுவந்தார். அங்கு தவறு செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைளைக் கண்டு எத்தனை நேர்மையான இடமிது என்று வியந்தார்.
ஓரிடத்தில் கற்பாறை ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு “என்ன இது?” என்று சித்திரகுப்தரிடம் வினவினார். “அது ஒன்றுமில்லை. ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டு” என்றார் சித்திரகுப்பதர். அதனை அறிய ஆவல் கொண்டார் முனிவர். “பூலோகத்தில் ஓர் அந்தணர் தன்னை நாடி வரும் யாவருக்கும் உணவிடும் அறத்தைச் செய்துவந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். மிகவும் குறும்புத்தனம் மிக்கவன். ஒரு நாள் வீட்டுக்கு உணவுண்ண வந்த விருந்தினர் ஒருவரின் உணவில் சிறுகல் ஒன்றைக் கலந்து வைத்துவிட்டான். அந்த விருந்தினரும் அதனை அறியாது உண்டுவிட்டார். சிறுவன் வளர வளர அவன் அறியாது போட்ட கல்லும் வளர்ந்து வளர்ந்து இப்பொழுது பாறையாக நிற்கிறது. அச்சிறுவன் இறந்து இங்கு வந்தவுடன் இக்கல்லை சிறிதுசிறிதாக உண்டு வினை கழிக்க வேண்டும். அதுவே அவனுக்காக தண்டனை” சித்திரகுப்தன் விளக்கினார்.
முனிவருக்கு மங்கலாக சில நினைவுகள் உள்ளத்தில் எழுந்தன. இது தன் வாழ்வில் நடந்தது போல உள்ளதே என்று எண்ணினார். அவரது எண்ணத்தைக் கண்டுகொண்ட சித்திரகுப்தர் “ஆம் அது வேறு யாருமல்ல நீங்கள்தான்” என்றார். பதறிப் போனார் முனிவர். விரைந்து எமதர்மரிடம் வந்தார். “ஐயா! நான் சிவபெருமானின் திருவடி அடையவே முயன்று வருகிறேன். ‘மீண்டும் ஓர் அன்னையின் கருப்பையூர் சென்று பிறவாமை வேண்டும்’ என்பதே என்றும் என் வேண்டுதலாக உள்ளது. இந்த வினை அதற்குத் தடை என்று நன்கு உணர்கிறேன். ஆதலால் இந்தப் பாறையை இப்பிறப்பிலேயே பொடிசெய்து உண்டு வினைகழிக்க அனுமதி வேண்டும்” என்று வேண்டிநின்றார். அனுமதி அளிக்கப்பட்டது. சிறிது சிறிதாக அப்பாறை அவரால் பொடிசெய்து உண்ணப்பட்டது. அதனால் அவரை ‘கல்லுண்ட முனிவர்’ என்னும் பொருளில் ‘சிலாதர்’ என்று அழைத்தனர்.
திருவையாற்றுப் புராணம் மற்றொரு காரணத்தையும் குறிப்பிடுகிறது. திருவைந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய மந்திரத்தைப் பல்லாயிரம் முறை செபித்தும் மந்திர சித்தி கிடைகாமல் முனிவர் ஒருவர் வருத்ததிலிருந்தார். அவரை ‘கோரத்தபசி’ என்றனர் பலர். அவரது தவத்தின் உக்கிரம் அப்படியிருந்தது. அதனால் பல்வேறு தலங்களுக்கும் சென்று திருவைந்தெழுத்தை உருவேற்றி வந்தார்.
ஒருமுறை அவர் திருவையாற்றுக்கு வந்தார். அங்கு திருநிலையறைக்குப் பின்புறமுள்ள ஆதிமூல விநாயகருக்கும் எழுமாதர் சந்நிதிக்கும் இடையிலிருந்து மந்திரத்தை உருவுற்றினால் சித்தி கிடைக்கும் என்று அறிந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்து தனது உள்ளக் குறையைச் சொன்னார். துர்வாசர் “ஆறுமாதகாலம் கல்லைப் பொடியாக்கியுண்டு திருவைந்தெழுத்தை உருவேற்றிவர சித்தி கிடைக்கும்“ என்றார். கோரத்தபசியும் அவ்வாறே செய்து இறையருளையும் மந்திரசித்தியையும் பெற்றார். அவரே சிலாதர் என்பர். அவர் கல்லையுண்டு திருவைந்தெழுத்தோதி சித்தி பெற்றதால் செப்பியேச்சுரம் என்று திருவையாறு அழைக்கப்படுகிறது என்கிறது ஐயாற்றுப் புராணம். அவர் தனக்கு மந்திரசித்தி கிடைக்க வழிகாட்டிய துர்வாசரை அடைந்து தனது நன்றிறைத் தெரிவித்து மேலும் சில ஐயங்களைக் கேட்டு தெளிந்தார். அவ்வையங்களே நந்திதேவரின் பிறப்புக்குக் காரணமாயின. அப்படி என்ன ஐயங்கள் அவை?
இன்னும் அறிவோம்…
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment