பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 29                                                            இதழ் -
நாள் : 13-11-2022                                               நாள் : - ௧௧ - ௨௦௨௨
 
   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
நில அளவு
     மருதநில ஊர்ப்பெயர்களுள் வேலியும் காணியும் நிலத்தின் அளவைக் குறிக்கும் சொற்களாகும். இந்த அளவைப் பெயர்களும் ஊர்ப்பெயர்கள் பெற்று அமைந்துள்ளன. தஞ்சை நாட்டில் ஐவேலி, ஒன்பது வேலி முதலிய ஊர்களும், மதுராந்தக வட்டத்திலுள்ள பெருவேலியும், திருநெல்வேலி என்ற மாவட்டப் பெயரும், நெய்வேலி என்ற பெயரும் இவ்வாறு எழுந்ததே.

     அவ்வாறே நெல்லை நாட்டிலுள்ள முக்காணி, சங்காணி முதலிய ஊர்களும் காணி என்னும் பெயரில் அமைந்துள்ளன. குறைந்த அளவினவாகிய குறுணியும் நாழியும் சிறுபான்மையாக ஊர்ப்பெயர்களில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். மதுரை மாவட்டத்தில் சோழங்குறுணியும், எட்டு நாழி என்னும் ஊர்ப்பெயரும் இவ்வாறே எழுந்தவைகளே.

நிலம்
     மருத நிலத்தில் ஆற்று நீராலும் ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும் நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள் பலவாகும். நிலம் என்ற சொல்லை நன்னிலம் என்ற ஊர்ப்பெயரால் காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக் குறிப்பதாகும்.

பண்ணை
     பண்ணை என்பது வயல் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். அச்சொல்லால் அமைந்துள்ள ஊர்ப்பெயர்கள் மருத நிலத்தில் காணப்படுகின்றன. நெல்லை நாட்டில் செந்திலான் பண்ணை என்பது ஓர் ஊரின் பெயர். சாத்தூருக்குத் தென்மேற்கே எட்டு மைல் தொலைவில் ஏழாயிரம் பண்ணை என்னும் ஊர் அமைந்துள்ளது.

பழனம்
    பழனம் என்னும் சொல்லும் வயலைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் திருப்பழனம் என்பது பாடல் பெற்ற ஒரு தலமாகும். அஃது இப்பொழுது திருப்பயணமாயிற்று.
 

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment