பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 51                                                                                   இதழ் -
நாள் : 16-04-2023                                                                    நாள் : -0-௨௦௨௩
 
 
 
முற்றம்
 
முற்றம்
         வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது. கோக்குள முற்றத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் கோக்குள முற்றனார் என்று பெயர் பெற்றார். கும்பகோணத்துக்கு நான்கு மைல் தூரத்தில் சத்தி முற்றம் என்னும் ஊர் உள்ளது. பழமை வாய்ந்த சத்தி முற்றத்தில் தோன்றிய புலவர் ஒருவர் நாரையைக் குறித்து நல்லதொரு பாட்டிசைத்துத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றார். அவரைச் சத்திமுற்றப் புலவர் என்று தமிழகம் பாராட்டுகின்றது. அதேபோல கொங்கு நாட்டில் ஆலந்துறை அருகில் முற்றம் என்ற ஊர் அமைந்துள்ளது.
 
 
குடி
    குடி என்னும் சொல் ஊர்ப் பெயர்களில் அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும். உறவு முறையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழுமிடம் குடியிருப்பு என்றும், குடி என்றும் சொல்லப்படும். தஞ்சை நாட்டில் பேரளத்துக்கருகே சிறுகுடி என்னும் ஊர் உள்ளது. இளையான் குடியிற் பிறந்த மாறன் என்ற திருத்தொண்டர் இளையான்குடி மாறன் என்று பெரிய புராணத்தில் பேசப்படுகின்றார். மற்றொரு சிவனடியாராகிய சிறுத்தொண்டர் பிறந்த ஊர் செங்காட்டங்குடியாகும். 
 
    மேலும், தேவாரத்தில் கற்குடி, கருக்குடி, விற்குடி, வேள்விக்குடி முதலிய குடியிருப்புகள் பாடல் பல பெற்றுள்ளன. நெல்லை நாட்டில் திருக்குறுங்குடி என்னும் வைணவத் திருப்பதி ஒன்று உண்டு. திராவிட மொழி நூலின் தந்தையென்று புகழப்படுகின்ற கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அரும்பணி செய்த இடம் இடையன்குடியாகும். பழநிக்கு அருகில் ஆயக்குடி என்ற ஊரும் அமைந்துள்ளது.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment