இதழ் - 42 இதழ் - ௪௨
நாள் : 12-02-2023 நாள் : ௧௨-0௨-௨௦௨௩ அக்காலத்தில் நெய்தல் நிலத்தில் சிறந்து விளங்கிய கடற்கரை நகரங்களின் அமைப்பைப் பண்டை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும் இரு பாகங்களையுடையதாய் இருந்தது. அவற்றுள், ஒரு பாகம் ஊர் என்றும், மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டன. பூம்புகார் நகரத்தின் ஒரு பாகம் மருவூர்ப் பாக்கம் என்றும், மற்றொரு பாகம் பட்டினப்பாக்கம் என்றும் வழங்கப்பெற்றன. இரண்டும் சேர்ந்தது காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது.
அவ்வாறே சோழ மண்டலக் கரையிலுள்ள நாகை என்னும் நகரமும் இரு பாகங்களையுடையதாய் இருந்தது. இக்காலத்தில் நாகூர் என்றும், நாகப்பட்டினம் என்றும் வழங்குகின்ற பகுதிகள் முற்காலத்தில் ஒரு நகரின் இரண்டு கூறுகளாகவே கருதப்பட்டன.
திருவாரூர் சோழ நாட்டின் தலைநகரமாய்த் திகழ்ந்த காலத்தில், நாகை சிறந்த துறைமுகமாகச் செழித்திருந்தது. கடுவாய் என்னும் ஆற்றுமுகத்தில் அமைந்த அத்துறைமுகத்தைக் கடல் நாகை என்று திருப்பாசுரம் போற்றுகின்றது. அந்நகரில் சைவமும் வைணவமும் பௌத்தமும் சிறந்தோங்கி இருந்தன என்று தெரிகின்றது. நாகையிலுள்ள திருமால் கோவிலைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
காரோணம் என்று புகழ் பெற்ற சிவன் கோவிலைக் குறித்து எழுபது திருப்பாசுரங்கள் தேவாரத்தில் காணப்படுகின்றன. இராஜராஜ சோழன் காலத்து அந்நகரில் பௌத்த சமயத்தார்க்குரிய பெரும் பள்ளிகள் அமைந்திருந்தன என்று சாசனங்களால் அறிகின்றோம். எனவே, கடல் நாகையில் பல்வேறான மக்களும் கலந்து வாழ்ந்த சிறந்த நெய்தல் நகரமாகக் காட்சி அளித்தது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment