பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் : 1                                                                           இதழ் :
நாள் : 1-5-2022                                                               நாள் :
-ரு-௨உஉ

 

    மொழி என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதனை மொழியைப் பயன்படுத்தும் நாம் அறிந்திருத்தல் வேண்டும். நம் எண்ணங்களைப் பிறர் அறிந்து கொள்ளவும், பிறர் எண்ணங்களை நாம் அறிந்து கொள்ளவும் உதவும் கருவி மொழியாகும்.   

மொழிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு

இலக்கணம் என்பது ஒரு மொழியின் விதிகளையும், கூறுகளையும் விளக்குவதாகும். மேலும் அது ஒரு மொழியின் வரையறை என்று கூறினாலும் மிகையாகாது.

  ஒரு மொழிக்கு சிறப்பையும், அழகையும் கொடுப்பது இலக்கணமாகும். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது ஆகும்.

இலக்கணம் பெயர் காரணம்

இலக்கு +அணம் = இலக்கணம்

எழுத்துக்களுடன் ணைந்து கரையாக விளங்குவது.  (இலக்கு என்பது பொருள் விளக்குதல், ஒளியூட்டல், தோற்றுவித்தல் ஆகும்.)

“கற்றோர் பின்பற்றக்கூடிய இலக்குதான் இலக்கணம்” என்று தேவநேயப்பாவாணர்  குறிப்பிடுகிறார்.

இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு

இலக்கியம் தாய் என்றால் இலக்கணம் சேய். இவ்வுறவு முறையை நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

“  இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

  எள்ளின் றாகில் ண்ணெயும் இன்றே

  எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல

 இலக்கியத் தினுன்றும் எடுபடும் இலக்கணம்”

என்று பேரகத்தியத் திரட்டு குறிப்பிடுகிறது. எள் இல்லாமல் எண்ணெய் கிடைக்காது. அதேபோல் இலக்கியம் இல்லாமல் இலக்கணம் இருக்க முடியாது. எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்திலிருந்து உருவாக்கப்பட்டதே இலக்கணம் ஆகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள். ஆகையால் இலக்கியமும் இலக்கணமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது ஆகும்.

  இலக்கியம் பல்கிப்பெருகும் காலத்தில் மொழியினை ஒழுங்குபடுத்த நம் முன்னோர்கள் கண்டறிந்த முறையே இலக்கணம் ஆகும். தொல்காப்பியத்தின் சிறப்பாயிரம் ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் எனக் குறிப்பிடுகிறது.

இலக்கணத்தால் ஏற்படும் நன்மை

பேச்சும் எழுத்தும் நம் வாழ்வோடு இணைந்தது. அதனை ஒழுங்குபடுத்தும் சாதனமாகத் திகழ்வது இலக்கணம் ஆகும். இலக்கணத்தை அறிவதால் நாம் நம் மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் முடியும். சொற்களின் பொருளினைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பிட்டு தின்றான், பிட்டுத் தின்றான் என்னும் இரண்டு சொற்களை எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவது சொல்லில் பிட்டு, தின்றான் என்னும் சொற்களுக்கு இடையில் “த்” என்னும் ஒற்று (மெய்யெழுத்து) மிக்கு வந்துள்ளது. முதல் சொல்லில் இடையில் ஒற்று மிக்கு வரவில்லை. அந்த ஒற்று மிக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்று நினைக்கலாம். ஆனால் இரண்டு சொற்களும் ஒற்று மிக்கு வருவதால் பொருளில் வேறுபடுகின்றன. 

பிட்டு தின்றான்    - பிட்டு என்னும் உணவைத் தின்றான். 

பிட்டுத் தின்றான்  - உணவைச் சிறிதளவு பிட்டுத் (எடுத்து) தின்றான்.

பொருள் வேறுபடுவதைக் கவனித்துப் பாருங்கள். ஓர் ஒற்று வருவதால் பொருள் மாறுபடும் என்றால் எங்கு ஒற்று வரவேண்டும், எங்கு ஒற்று வரக்கூடாது என்ற இலக்கண விதிமுறை முக்கியமாகிறது. ஆகவே இலக்கணத்தைத் திறம்படக் கற்று மொழியைப் பிழையற எழுதவும் பேசவும் முயற்சிப்போம்.

 

( தொடர்ந்து கற்போம்… )
 
 

No comments:

Post a Comment