பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

 

இதழ் - 18                                                                      இதழ் -
நாள் : 28-8-2022                                                          நாள் : --௨௦௨௨

  

மெய்ம்மயக்கம்
 
     மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளையும் இறுதியில் வரும் எழுத்துகளையும் அறிந்து கொண்டதைப் போலவே மொழிக்கு இடையில் வரும் எழுத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வெழுத்துகள் தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் கண்டறிய உதவுகின்றன. சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும். 
 
     இது இரண்டு வகைப்படும்.
         1. உடனிலை மெய்மயக்கம்
         2. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
 
1. உடனிலை மெய்ம்மயக்கம்
 
     சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துகள் தன் எழுத்துகளுடன் மட்டுமே சேர்வதால் இவற்றை உடனிலை மெய்மயக்க எழுத்துகள் என்கிறோம். இந்த எழுத்துக்களின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும். பிற எழுத்துகள் வாரா. அவ்வாறு வந்தால் அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது.
 
சான்று
  • க்    பக்கம்
  • ச்    அச்சம்
  • த்    மொத்தம்
  • ப்    அப்பம்

2. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
 
     சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்எழுத்துகள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும். 
 
     ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகள் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற  மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்துவரும். எனவே இவ்விரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்மயக்கத்திற்கு மட்டுமே உரியவையாகும்.
 
சான்று
  • ர்    உயர்வு
  • ழ்    சூழ்க
 
     க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறு மெய்களைத் தவிர்த்த ஏனைய 12 மெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன. இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ளவேண்டும்.
 
சான்று
  • ங்    அங்ஙனம், தங்கம்
  • ஞ்    விஞ்ஞானம், மஞ்சள்
  • ட்    பட்டம், காட்சி
  • ண்    தண்ணீர், நண்பகல்
  • ந்    செந்நெறி, தந்த
  • ம்    அம்மா, அம்பு
  • ய்    செய்யலாம், வாய்மை
  • ல்    வல்லவன், செல்வம்
  • வ்    இவ்விதம், தெவ்யாது
  • ள்    பள்ளம், கொள்கை
  • ற்    வெற்றி, பயிற்சி
  • ன்    மன்னன், இன்பம்
 
ஈரொற்று மெய்ம்மயக்கம்
     தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும். (மூன்று மெய்களாக மயங்கி வரும்) இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.
 
சான்று
  • ய்    -    காய்ச்சல், வாய்க்கால்
  • ர்    -    சர்க்கரை, ஈர்ப்பு
  • ழ்    -    வீழ்ச்சி, வாழ்க்கை


( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment