பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 40                                                                                       இதழ் - ௪0
நாள் : 29-01-2023                                                                         நாள் : -0-௨௦௨
 
  

பழமொழி – 40

ஆற்றக் கரும்பனை அன்ன துடைத்து

    ஒருவர் பெரும் செல்வம் உடையவர்களாய் இருந்தாலும் பசித்தவர்களுக்கு அச்செல்வம் உதவாமல் போனால் அச்செல்வமானது கரிய பனைமரத்தைப் போன்றது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

    விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
    வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
    இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்
    கரும்பனை அன்ன துடைத்து'.


    ஒருவர் பெரும் செல்வம் உடையவர்களாய் இருந்தாலும் அச்செல்வமானது தன் வீட்டிற்கு பசியுடன் வருபவர்களுக்குப் பசியைப் போக்கப் பயன்பட வேண்டும். அவ்வாறில்லாமல் செல்வத்தினை சேமித்து வைத்தால் அதனால் எவ்விதப் பயனும் இல்லை.

    இதனை ஒருவர் கரிய பனைமரத்தினை நீர் ஊற்றி வளர்த்து வந்தாலும் அது உடனடியாக வளர்த்தவர்களுக்குப் பயன் தருவதில்லை. அப்பனை வளர்ந்து காய் தர காலம் ஆகும். அது பிறருக்குத்தான் உதவுமே தவிர பனையை வைத்தவருக்கு உதவாது என்பதையே 'ஆற்றக் கரும்பனை அன்ன துடைத்து' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.  இதனை “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற நக்கீரரின் புறநானூற்று பாடல் வரிகளாலும் அறியலாம்.
 
      இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment