பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 100                                                                                                  இதழ் - 00
நாள் : 23-03-2024                                                                                  நாள் : -0-௨௦௨


குலசேகர பாண்டியன்

     பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அரசு புரிந்த மன்னன் குலசேகர பாண்டியன். அவன் ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில சிற்றூர்களைச் சேர்த்து, இராஜ கம்பீர சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரால் ஓர் உண்டாக்கினான் என்று திருப்பூவணத்துச் செப்பேடு கூறுகின்றது. இராஜ கம்பீரன் என்பது குலசேகர பாண்டியனது விருதுப் பெயர் என்று தெரிகின்றது. இக்காலத்தில் இராமநாதபுரச் சிவகங்கை வட்டத்திலுள்ள இராஜ கம்பீரமே அவ்வூராகும்.


ஸ்ரீவல்லபன்

     தென்பாண்டி நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்த பாண்டியன் ஸ்ரீவல்லபன் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகின்றது. தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள மணப்படை வீடு அம்மன்னனுக்குரிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கிற்றென்று தெரிகின்றது. அப்படை வீடு, ஸ்ரீவல்லபன் மங்கலம் என்ற ஊரின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்று சாசனம் கூறும். அவ்வூரின் அருகே கொட்டாரம் என்னும் பெயருடைய சிற்றூர் காணப்படுகின்றது. கொட்டாரம் என்பது அரண்மனையைக் குறிக்கும். இவ்வூர்களுக்கு எதிர்க்கரையில் செப்பறை என்ற சிற்றூர் அமைந்துள்ளது.

        செப்பறை என்னும் சொல் செம்பினால் ஆகிய அறை என்று பொருள்படும். செப்புத் தகடுகள் பொதிந்து கோட்டையின் மதில்களை வலுப்படுத்தும் முறை முன்னாளில் கையாளப்பட்டதாகத் தெரிகின்றது. எனவே, செப்பறை என்பது ஒரு சிறந்த கோட்டையாக இருந்திருத்தல் கூடும். இடிந்த மதிற்சுவர்களும், உயர்ந்த மேடுகளும் இன்றும் அங்கே காணப்படுகின்றன. அதற்கு அண்மையில் இராஜவல்லிபுரம் என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று அமைந்திருக்கின்றது. சாசனத்தில் இராஜவல்லவபுரம் என்று அவ்வூர் வழங்கும். இவைகளில் எல்லாம் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டியனது கைவண்ணம் விளங்கக் காணலாம்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment