இதழ் - 174 இதழ் - ௧௭௪
நாள் : 14 - 09 - 2025 நாள் : ௧௪ - ௦௯ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
சாதி மறப்பு
1930ஆம் ஆண்டு தி.சு.அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தைத் தோற்றுவித்ததற்கு முக்கியமான காரணம் ஏழை எளியவர்கள், சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டவர்கள், கற்க இயலாத சூழலில் இருப்பவர்கள் யாவரும் கல்வி பயில வேண்டும் என்பதேயாகும். வித்யாலயத்தின் முதல் மாணவரே சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘ஹரிஜன்’ என்று அழைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஹரிஜன மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாக அன்று கருதப்பட்டனர். அவரைப் பள்ளியில் சேர்த்தமையினால் மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு கல்வி பயில அனுப்பாமையையும் சில கேலி மொழிகளைத் தாம் எதிர்கொண்டமையையும் தமது ‘அருளின் ஆற்றல்’ நூலில் ஐயா அவர்கள் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு வித்யாலயம் சில நல்ல உள்ளங்களாலும் காந்தியக் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாலும் வளர்ந்தது. அக்காலத்தில்தான் பெரியசாமித்தூரன் வித்யாலய ஆசிரியப் பணியில் சேர்ந்து தொண்டாற்றத் தொடங்கினார். அவர் தொண்டாற்றிய காலத்தில் வித்யாலயம் ஒழுக்க நெறிமுறைக்குட்பட்ட நிறுவனமாக வளர்ந்து நின்றது. அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் குறித்து அவர் பின்னாளில் தமது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அக்குறிப்புகளில் ஒன்று வித்யாலய மாணவர்கள் சுற்றலா சென்றது குறித்தது. வித்யாலயப் பணியாளர்களும் மாணவர்களும் தொண்டர்களும் சாதியத்தை மறந்து நின்ற குறிப்பைத் தாங்கிய நிகழ்வு அது.
வித்யாலயத்தில் சுற்றுலா செல்வதானால் எங்கு செல்வது, எப்படிச் செல்வது, உணவு முதலிய தேவைகளுக்கு என்ன செய்வது என்பன போன்றவற்றைக் குறித்து மாணவர்களே முடிவு செய்வர். ‘மாணவர்களால் தீர்மானிக்கப்படாத இடங்களுக்குப் பொதுவாக சுற்றுலா செல்வதில்லை’ என்று தூரன் குறிப்பிடுகிறார். ஒருமுறை கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பேரூர் பட்டீச்சுவரப் பெருமான் திருக்கோயிலுக்கு பயணம் செய்வதென மாணவர்கள் முடிவு செய்தனர். சிற்பச் சிறப்பு வாய்ந்த கோயில் என்று தூரன் இதனை நினைவு கூர்கிறார். ஆம், பேரூர் திருக்கோயிலைக் கண்டவர்கள் அதன் சிற்பங்களின் அழகையும் பெருமையையும் அறிவர். குறிப்பாக பொ.ஆ.பின். 16ஆம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்க மன்னரால் எழுப்பப்பட்ட கூத்தப்பெருமான் திருக்கோயில் மண்டபம் கலைநயமிக்க சிற்பத் தொகுதிகளைக் கொண்டது. தூணில் அமைந்துள்ள எண்பெரும் சிற்பங்கள் யாரும் காணத்தவறவிடக் கூடாதவை. அங்குதான் வித்யாலய மாணவர்கள் சுற்றுலா செல்வதென முடிவு செய்தனர். மாணவர்களுடன் தூரன் அவர்களும் பி.ஏ. மகாலிங்கம் அவர்களும் சென்றனர்.
சுற்றுலாவிற்கென குறித்த நாளில் ஐயா அவர்களின் தமையனார் தி.சு. திருஞானசம்பந்தம் அவர்களின் இல்லத்தில் அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உணவுண்ட பின்னர் நேராக பேரூர் திருக்கோயிலுக்குச் சென்றனர். அனைவரும் சிற்பங்களைப் பார்த்து வியந்தனர்; மகிழ்ந்தனர். இறைவனை நெஞ்சுருக வழிபட்டனர். அப்பொழுதுதான் பெரியசாமித் தூரன் அவர்களுக்கு ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. நாம் முன்னரே பார்த்தது போல வித்யாலயம் ஹரிஜன மாணவர்களும் கல்வி பயிலும் நிறுவனம். அக்காலத்தில் ஹரிஜன மாணவர்கள் திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது (நமது சமூகம் அதனைக் கடந்த வந்த வரலாறு அனைவரும் அறியவேண்டியது). சுற்றுலா வந்திருந்த மாணவர்களில் சிலர் ஹரிஜன மாணவர்கள். வித்யாலயம் அந்த பிறப்பு வேற்றுமையைக் கடைபிடிக்காத இயல்புடையது. அதனால் இது அவர்களின் நினைவிலேயே வரவில்லை. தூரன் அவர்களுக்கு அது திடீரென நினைவுக்கு வரவே வீண்தொல்லைகள் ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணினார். உடன் வந்திருந்த பி.ஏ. மகாலிங்கம் அவர்களிடம் செய்தியைக் கூறினார். அதற்கு மகாலிங்கம் அவர்கள் “தவறு செய்தாகிவிட்டது. நாம் சாதியை மறந்துவிட்டோம். இனிமேல் இவ்வகையான நிலைமையை ஏற்படுத்தக் கூடாது” என்று கூறிவிட்டார். எப்படியோ எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் சுற்றலா நிறைவடைந்தது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு. பி.ஏ. மகாலிங்கம் அவர்கள் தூரன் அவர்களிடம் கூறிய பதில்தான் அது. “தவறு செய்தாகிவிட்டது. நாம் சாதியை மறந்துவிட்டோம்” என்ற பதில் வித்யாலயத்தின் சாதி மறப்பை எடுத்துக்காட்டுகிறது. சாதிய வேறுபாடுகளைப் பல காலமாகக் கடைபிடிக்காத காரணத்தினாலும் உள்ளத்தில் சாதிய உணர்வின்றி அன்பைக் கடைபிடித்து ஒற்றுமையுடன் அனைவரும் பழகிவந்த காரணத்தினாலும் அவர்கள் சாதியை மறந்துவிட்டமையை அறியமுடிகிறது. காந்தியடிகளின் எண்ணம் வித்யாலயத்தில் செயல்பாட்டில் இருந்துள்ளது பெரியசாமித் தூரன் அவர்களின் நினைவுக் குறிப்புகளில் வெளிப்படுகிறது.
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment