இதழ் - 160 இதழ் - ௧௬௦
நாள் : 08 - 06 - 2025 நாள் : ௦௮ - ௦௬ - ௨௦௨௫
தமிழ் புலவரான காரியாசான் சிறுபஞ்சமூலம் என்ற தன் நூல் மூலம் அறக்கருத்துக்களை எடுத்து இயம்புவதோடு சில உயிரியல் உண்மைகளையும் கூறுகிறார்.
அக்காலத் தமிழ் புலவர்களது புலமை எத்தகையது என்பதை இவ்வாறான பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
"சிலம்பிக்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றுஅல் வசை"
சிலந்திக்கு அழிவைக் கொடுப்பது அதன் முட்டை. அதாவது முட்டை பொரித்து குஞ்சு வெளிவரும் நிலையில் தாய்ச் சிலந்தி இறந்துவிடும். நீண்ட கொம்பினை உடைய விலங்குகளுக்கு அதன் கொம்புகளே எமனாகும். காட்டில் மரங்களுக்கு இடையே ஓடுகையில் அதன் கொம்புகள் மரக் கிளைகளில் சிக்கி அவை இறந்து போக நேரும். மானிற்கு அதன் மயிரே அழிவைக் கொடுக்கும். இந்த அடியில் "வலம் படா மா" என்கிறார் ஆசிரியர். அதாவது மான் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமைக்கு அதனது மயிரே காரணமாக அமைகிறது. தாய்நண்டின் உடலைக் கிழித்தே அதனது குஞ்சுகள் வெளிவரும். எனவே நண்டுக்கு அதன் குஞ்சுகளே கூற்றமாக அமைந்து விடுகிறது. இந்த உயிரிகளின் உயிருக்கு எவை எவையால் அழிவு உண்டாகும் என்பதனை மிக அழகாகக் கூறிவிட்டு அடுத்ததாக அவர், மனிதனைப் பற்றிக் கூறுகிறார்.
நல்லனவற்றையே பேசவேண்டிய நாக்கு, எப்பொழுது தீயனவற்றைப் பேசத் தொடங்குகிறதோ, அதுவே அம்மனிதனுக்குக் கேடாக அமைகிறது. அதாவது மனித நாக்கு பேசுகின்ற வசை மொழிகளே அவனுக்கு எமன் என்கிறார் தமிழ் புலவர்.
வரும் கிழமையும் காரியாசான் வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment