பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 64                                                                                          இதழ் -
நாள் : 16-07-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
     
இடைச்சொல்
 
    தனித்து இயங்கும் ஆற்றலின்றிப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் முன்னும் பின்னும் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் (இடை - இடம்) எனப்படும்.

    "மொழிக்கு முன்னும், பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடையில் வருதலின் இடைச்சொல்லாயிற்று" என்பார் உரையாசிரியர் சேனாவரையர்.

    இடைச் சொல்லுக்குத் தனியான பொருள் இல்லை. பெயர்ச்சொல்லைச் சார்ந்து வரும்போது பெயரின் பொருளையும் வினைச்சொல்லைச் சார்ந்து வரும்போது வினையின் பொருளையும் பெற்று வரும்.
 
    வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
    தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
    குறிப்பென் எண் பகுதியில் தனித்து இயலின்றிப்
    பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
    ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்.
                                ( நன்னூல் நூற்பா. எண். 420 )
 
     வேற்றுமை உருபுகள், விகுதிகள், இடைநிலைகள், சாரியைகள், உவம உருபுகள், சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள், ஏ, ஓ, உம், மற்று, கொல், தான், வாளா, சும்மா, அந்தோ, ஐயோ, சீச்சீ, அம்மா, முன், பின், ஆயினும், இனி, தொறும், தோறும் முதலியன இடைச் சொற்கள்.

சான்று
  • கண்ணனைக் கண்டேன்  - ஐ        -    வேற்றுமை உருபு
  • கயல் போன்ற விழி         - போன்ற  -    உவம உருபு
  • சென்றானா?             - ஆ       -    வினா
  • சென்றாள்                 - ஆள்     -     விகுதி


 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment