முருகக்கடவுளின் அருளால் குமரக்கோட்டத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்தபுராண நூலைத் தமிழறிஞர்கள் முன்னிலையில் அரங்கேற்றிய வரலாற்றை சென்ற வாரம் சிந்தித்தோம். இவ்வாரமும் புராண அரங்கேற்ற நிகழ்வொன்றையே சிந்திக்க இருக்கிறோம். சென்ற வாரத்தைப் போலவே இன்று சிந்திக்க இருப்பவரும் கச்சியப்பர்தான். ஆனால் முதலில் பார்த்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இப்பொழுது பார்க்க இருப்பவர் கச்சியப்ப முனிவர். முன்னவர் முருகக்கடவுளின் அருளாடலை வெளிப்படுத்தியவர். பின்னவர் விநாயகப் பெருமானின் பெருமைகளைப் பாடியவர்.
காலம்… பதினெட்டாம் நூற்றாண்டு… விக்கிரமசிங்கபுரத்திலிருந்து முக்களாலிங்கர் என்ற இளைஞர் ஆதீனத் தம்பிரான்களுடன் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்து சேர்ந்தார். வேலப்பதேசிகரிடம் தமிழும் வடமொழியும் கசடறக் கற்று தேர்ந்தார். தீக்கைபெற்று துறவுநெறி நின்றார். சிவஞானமுனிவரானார்.
சிவஞானமுனிவர் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தபொழுது அங்கிருந்த சைவ அன்பர்கள் காஞ்சிப்புராணத்தைத் தமிழில் அருளவேண்டும் என்று அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். காஞ்சித் தலத்தின் பெருமைகளை காஞ்சி க்ஷேத்ர மகாத்மியத்தில் கண்டும் தக்க அறிஞர்களிடம் கேட்டும் குறித்துக் கொண்டு காஞ்சிப்புராணத்தைத் தமிழில் இயற்றத் தொடங்கினார். காஞ்சிபுராணத்தின் முதற்காண்டம் இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்தொன்பது பாடல்களாக நிறைவு பெற்றது.
சிவஞான முனிவரது தமிழாற்றலாலும் சைவ சாத்திர ஞானத்தாலும் ஈர்க்கப்பட்டு தமிழறிஞர்களும் சைவ அன்பர்களும் அவரைத் தேடி காஞ்சியில் மொய்த்தனர். அவர்களது ஞானத்தேடலுக்கு உதவியும் ஐயம் தெளிவித்தும் அருட்சொற்களை அருளியும் சிவஞானமுனிவர் காஞ்சியில் தங்கியிருந்தார். அவரது புகழ் காஞ்சியிலிருந்த சில புலவர்களுக்கு உளக்கொதிப்பை அளித்தது. அவரைச் சிறுமைப்படுத்த காலங்கருதிக் காத்திருந்தனர். அச்சமயத்தில்தான் காஞ்சிப்புராண முதற்காண்டம் நிறைவுபெற்றது.
காஞ்சிப்புராண முதற்காண்டத்தை அரங்கேற்றுவதற்கான ஏற்பாட்டை சிவஞானமுனிவரும் காஞ்சிபுரத்து மெய்யன்பர்களும் மேற்கொண்டனர். இதுதான் தக்க காலம் என்றெண்ணி உளக்கொதிப்பு கொண்டிருந்த புலவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். காஞ்சித்தலத்தில் தேவாரத் திருப்பதிகங்களை விண்ணப்பம் செய்யும் ஓதுவாரை அழைத்து நாளை நடைபெறவுள்ள நூல் அரங்கேற்றத்தில் தடை ஏற்படுத்துவதற்கான குறிப்புகளை அளித்தனர். ஓதுவாரும் உள்ளூர்ப் புலவர்களின் சொற்களுக்குப் பணிந்தார்.
காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில் மண்டபத்தில் அரங்கேற்றம் ஏற்பாடாகியிருந்தது. தமிழறிஞர்கள், சைவ அன்பர்கள், புலவர்கள், பொதுமக்கள் என்று மக்கள் திரள் அங்கு நிரம்பிருந்தது. சிவஞானமுனிவருக்குச் சிறுமைசெய்ய ஏற்பாடு செய்திருந்த புலவர்களும் ஓதுவாரும் அத்திரளில் சிறுதுரும்பென அமர்ந்திருந்தனர்.
அவையின் முன்னிலையில் மக்கள் திரளைப் பார்த்தவண்ணம் சிவப்பொலிவுடன் சிவஞானமுனிவர் மேடையில் அமர்ந்திருந்தார். அவரது திருமுன் காஞ்சிப்புராண முதற்காண்டத்தின் ஏடுகள் செம்பட்டுத்துகிலின் மீது வைக்கப்பட்டிருந்தது. சிவஞானமுனிவரின் வலப்பக்கத்தில் சற்று தள்ளி அவரது சீடர்கள் அமர்ந்திருந்தனர்.
அரங்கேற்றம் தொடங்கலாம் என்பது போல ஏகாம்பரநாதர் கோயில் மணி ஒலித்தது. சிவஞானமுனிவர் காஞ்சிப்புராண ஏடுகளைத் தொட்டு வணங்கி கைகளில் எடுத்தார். அவை அவரது சொற்களைச் செவிமடுக்க அமைதிகாத்து அமர்ந்திருந்தது. ‘திருநிகர்த்த ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்’ என்று விநாயகப் பெருமானை வணங்கி அரங்கேற்றத்தைத் தொடங்கினார் சிவஞானமுனிவர். ஐங்கரப்பெருமானை வணங்கிவிட்டு கடவுள் வாழ்த்தின் முதற்பாடலைப் பாடினார்.
“சங்கேந்து மலர்க்குடுங்கைப் புத்தேளும் மறைக்கோவும் தழல்கால் சூலம்
அங்கேந்தும் அம்மானும் தத்தமது தொழிற்றலை நின்றாற்றச் செய்தோர்
பங்கேந்தும் பெருமாட்டி விழிகளிப்ப இருமுனிவர் பணிந்து போற்றக்
கொங்கேந்து மணிமன்றுட் குனித்தருளும் பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம்”
தில்லையுள் திருவடி துக்கியாடும் கூத்தனை வழுத்தும் பாடலிது. இப்பாடலைச் சொல்லிப் பொருளும் விளக்கினார் சிவஞானமுனிவர். அவை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்து காஞ்சித்தலத்தின் மூலவரான ஏகாம்பரநாதரை வழுத்தும் பாடலைப் பாடினார்.
”தணந்த பெருந்துயர்க் கடன்மீக் கூர்தலினான் மலைபயந்த தரளமூரல்
கணங்குழை யாள்புரிபூசை முடிவளவுந் தரியாமலிடை யேகம்பை
அணங்கினைத் தூதெனவிடுத்து வலிந்திறுகத்தழீஇக் கொள்ளவமை யாக்காதல்
மணந்தருளிக் குறிபூண்ட வொருமாவிற் பெருமானை வணக்கஞ் செய்வாம் ”
என்று பாடி நிறுத்திப் பொருள் கூற சொல்லெடுத்தார். முன்னமர்ந்திருந்த திரளிலிருந்து அடிக்கறைகொண்ட விளக்கொளி போல வெண்ணீறு ஒளிரும் நெற்றியுடன் ஒருவர் எழுந்தார். உளக்கொதிப்புடைய புலவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஓதுவார்தான் அவர். “ஐயா! தங்கள் பாடலில் ஒரு பிழையுள்ளது” என்றார். தமிழ்முதல்வர் அகத்தியர் அருளால் பிறந்த சிவஞானமுனிவர் பாடலில் பிழையா என்று சீடர்களுக்குப் பேரதிர்ச்சி. முதற்பாடலைப் பாடியதும் தடையா என்று அரங்கேற்ற ஏற்பாட்டாளர்களுக்குச் சங்கடம். ஓதுவாருக்கு சிவஞான முனிவரின் பாடலில் பிழைகாணும் அளிவிற்குத் தமிழறிவா என்று தமிழ்ப்புலவர்கள் சிலர் எண்ணமிட்டனர். அவையில் சிறு சலசலப்பு தொடங்கியது. அங்கு பதட்டமின்றி அமைதியாக இருந்தவர் சிவஞானமுனிவர் மட்டும்தான்.
சொல்லுங்கள் ஐயா! என்ன பிழை கண்டீர்கள்?” என்றார் முனிவர்.
தாங்கள் பாடியிருப்பது காஞ்சித்தலத்தின் பெருமைகளை இயம்பும் புராணத்தையல்லவா? அப்படியிருக்க, தாங்கள் கடவுள் வாழ்த்துப் பகுதியில் தில்லைப் பதியின் கூத்தனை முதலில் பாடி காஞ்சி ஏகாம்பரநாதரைப் பின் பாடியிருப்பது பொருந்தவில்லை. முதலில் ஏகாம்பரநாதரையல்லவா வணங்கிப் பாடியிருக்க வேண்டும்! இது மரபுப் பிழையாகத் தெரிகிறதே”
கூட்டத்திலிருந்த அழுக்காற்றுப் புலவர்கள் தங்கள் திட்டம் செவ்வனே தொடங்கிவிட்டது என்று உள்மகிழ்ந்தனர். உள்ளணுர்வு மெய்யிற்படாமல் கரந்துகொண்டனர். சிவஞானமுனிவரின் விளக்கத்திற்காக அவை காத்திருந்தது. “இது மரபுப்பிழையல்ல ஐயா! இது புராண வழக்கம்தான். இட்ட தெய்வ வணக்கம் முதலில் வருவது ஏற்புடைத்தே” என்று விளக்கமளித்தார். ஆனால் ஓதுவார் ஏற்கவில்லை. மேலும் விளக்கமளித்தார். அதற்கும் ஏற்பில்லை. விதண்டாவாதமாகவே பேசிக்கொண்டிருந்தார் ஓதுவார். அவைக்கும் ஓதுவாரின் செயலால் கசப்புதான். என்ன செய்வது என்று சிவஞானமுனிவருக்கும் புரியவில்லை. அவையினருக்கும் தெரியவில்லை.
வலப்புறமிருந்த சீடர்குழாத்துள் வெண்ணீறு விளங்கும் நெற்றியுடனும் சடை முடியுடனும் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்தார். சிவஞானமுனிவரை வணங்கி “ஐயா! தாங்கள் அமைதி காணுங்கள். இவர் யாரோ ஒருவர் எய்த அம்பு என்று தோன்றுகிறது. அதனால்தான் விதண்டாவாதம் செய்கிறார். இவருக்கு பதில்சொல்ல எனக்குத் தாங்கள் கட்டளையிட்டு அருள வேண்டும்” என்றார். சிவஞானமுனிவர் மென்னகை புரிந்தார். சடைகொண்ட தன் சீடனின் வாதத்திறனை நன்கறிவார் அவர். இனி ஓதுவாரின் நிலை சங்கடம்தான் என்றறிந்து “சரி, ஆகட்டும்!” என்றார். ஆம், எழுந்தவர் சாதாரண ஆள் இல்லை. கவிராட்சசர்… தணிகைப் புராணம், பேரூர்ர்ப்புராணம், விநாயகப் புராணம் என்று பல புராணங்களையும் தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் பாடிய கச்சியப்ப முனிவர் அவர். அவரைத் தமிழால் எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல. இத்தனையையும் அறிந்தே சிவஞான முனிவர் ‘சரி’ என்றார்.
கச்சியப்ப முனிவர் அவையின் முன்வந்து நின்றார். மக்கள் திரள் நடப்பவற்றின்மீது ஆர்வம் கொண்டது.
கச்சியப்பர் ஓதுவாரிடம் “ஐயா! தாங்கள் யாரோ?” என்றார்.
நான் காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஓதுவாராவேன்”
மிக்க நல்லது. ஒரு காரியம் செய்யுங்கள். காஞ்சி ஏகாம்பரநாதர் மீது தேவாரத் திருப்பதிகங்கள் உண்டல்லவா?”
ஆம் ஐயா!”
நல்லது. மூவர் தேவாரத் திருப்பதிகங்களுள் ஏதேனுமொன்றைத் தாங்கள் ஓத நாங்கள் கேட்க ஆவலோடிருக்கிறோம்.”
இதற்கும் நான் எழுப்பிய கேள்விக்கும் என்ன தொடர்பு ஐயா”
ஓதுவார் அவர்களே! முதலில் ஏகாம்பரநாதரை தேவாரப் பதிகங்களால் போற்றுங்கள், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.”
சரி, ஓதுகிறேன்”
ஓதுவார் குரலைச் சரிசெய்து கொண்டு காஞ்சித்தலத்துப் பதிகமொன்றை ஓதத் தயாரானார்.
திருச்சிற்றம்பலம்” என்றார் ஓதுவார்.
நிறுத்துங்கள் ஐயா!” என்றார் கச்சியப்பர்.
ஏன் நிறுத்தச் சொன்னீர்கள்” என்று கடுமையான குரலில் கேட்டார் ஓதுவார்.
நான் ஓதுமாறு கேட்டது காஞ்சித்தலத்தின் தேவாரப் பதிகமொன்றை என்று நினைவுபடுத்தவே நிறுத்தச் சொன்னேன்” என்றார் கச்சியப்பர்.
அதைத்தானே நான் ஓதத் தொடங்கினேன்” என்றார் ஓதுவார் எரிச்சலுடன்.
ஆனால் நீங்கள் திருச்சிற்றம்பலம் என்றீர்களே” என்று மென்சிரிப்புடன் கூறினார் கச்சியப்பர்.
ஆம், அதிலென்ன பிழை”
காஞ்சித்தலத்தின் தேவாரத்தை ஓதத் தொடங்கிய நீர் ஏன் திருச்சிற்றம்பலம் என்று தொடங்கினீர்கள். அது மரபுப்பிழைதானே. ‘பிருத்வியம்பலம்’ என்றுதானே நீங்கள் தொடங்கியிருக்க வேண்டும்.”
என்ன ஐயா சொல்கிறீர்கள். எந்தத் தலத்து தேவாரப் பதிகமாயினும் திருச்சிற்றம்பலம் என்று தில்லைக் கூத்தனை நினைந்து தொடங்குவதுதானே மரபு. இது தாங்கள் அறியாததல்லவே. ஆயினும் அறியாப் பிள்ளைபோல் கேட்கிறீரே” என்று சொல்லி நகைத்தார் ஓதுவார்.
நாம் அறிவோம் ஐயா! நாம் மட்டுமல்ல, அனைவரும் அறிவர். ஆனால் உங்களை அனுப்பிய உள்ளூர்ப்புலவர்கள் சிலர் மட்டுமே இதை அறியாத மூடராயிருக்கின்றனர். அவர்களுக்குச் சொல்லும் இதை. எனது குருநாதரும் அந்த மரபின் அடிப்படையிலேயே காஞ்சிப்புராணத்தின் கடவுள் வாழ்த்தின் முதற்பாடலில் தில்லைக் கூத்தனையும் அடுத்த பாடலில் ஏகாம்பரநாதரையும் வணங்கினார் என்று அறிந்துகொள்க” என்று சொல்லி கூட்டத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்த சில புலவர்களைப் பார்த்தார் கச்சியப்பர்.
அவையின் அத்தனை கண்களும் அத்திசை திரும்பியது. புலவர்கள் தங்கள் தவறுணர்ந்து மன்னிப்பு கோரினர். மக்கள் திரள் பேராரவாரம் செய்தது. கச்சியப்பமுனிவரின் வாதத்திறனைக் கொண்டாடியது. இத்தனையையும் ‘ஏகாம்பரநாதரின் அருளாடல்’ என்றே கண்டுகொண்டிருந்தார் சிவஞானமுனிவர். கச்சியப்பமுனிவர் குருவின் திருவடிகளில் வணங்கி எழுந்தார். தனது சீடனைப் பெருமைபொங்க பாரத்தருளினார் சிவஞானமுனிவர்.
மகனே! உனது கவியாற்றலை உன் நூல்களில் கண்டேன். உன் வாதத்திறனை இன்று கண்டேன். உனக்கு ஒரு கட்டளை வைத்திருக்கிறேன். நீ செய்வாய்.”
”ஆணையிடுங்கள் ஐயா!”
”காஞ்சிப்புராணத்தின் முதற்காண்டத்தை நான் பாடியுள்ளேன். இதன் இரண்டாம் காண்டத்தை நீ பாடி நிறைவுசெய்ய வேண்டும்.”
கண்களில் நீர் வழிய சிவஞான முனிவரின் திருவடிகளில் விழுந்தார் கச்சியப்ப முனிவர்.
அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. 2749 பாடல்களுக்குப் பொருள்சொல்லி காஞ்சிப்புராண அரங்கேற்றத்தை நிறைவுசெய்தார் சிவஞானமுனிவர். காஞ்சிபுரத்துத் தமிழ்ப்புலவர்களுக்கு நூல்நயமும் சைவ அறிஞர்களுக்கு அதிலுள்ள சித்தாந்தக் கருத்துகளும் மெய்யன்பர்களுக்கு ஏகாம்பரநாதரின் அருளாடல்களும் உவப்பளித்தன.
காஞ்சிப்புராண அரங்கேற்றத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் உலகம் தேவாரத் திருப்பதிகங்களை ஓதும்முன் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லித் தொடங்கும் மரபுணர்ந்தது.
(அரங்கேற்றம் தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment