இதழ் - 164 இதழ் - ௧௬௪
நாள் : 06 - 07 - 2025 நாள் : ௦௬ - ௦௭ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
சிவபுராணம் அருளிய சுடுசோறு
வித்யாயலம் தொடங்கப்பட்ட காலத்தில் விடுதியில் உணவுக்கென்று சில நடைமுறைகள் வழக்கத்தில் இருந்துள்ளன. பணியொதுக்கீட்டின்படி உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபடுதல், சிவபுராணம் பாடிய பிறகு உணவருந்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கன.
இந்த உணவு நடைமுறை குறித்த ஒரு சுவையான நிகழ்வை தூரன் நினைவு கூர்கிறார். “காலையில் பழைய சாதம், மோர். அடுத்த வாரம் சமையல் பணிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த வாரத்திலேயே எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும். சுமார் எண்பது பேருக்கென்று தனியாக குக்கர் ஒன்று உருவாக்கியிருந்தோம். அதிலே இரவில் போதுமான அரிசியைப் போட்டு, தண்ணீரும் ஊற்றி அடுப்பேற்றி வைத்துவிட்டால் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான சாதம் கிடைக்கும். பரிமாறும் போது சிவபுராணம் பாடுவது வழக்கம். சிவபுராணம் பாடி பிரம்மார்ப்பணம் சொல்லி, பிறகுதான் உணவருந்துவது வழக்கம். சில வேளைகளில் அடுப்பு எதிர்பார்த்தபடி எரியாமல் அணைந்து போகும். சில வேளைகளில் மறந்துவிடுவார்கள். குழந்தைகள்தானே? தூக்க மயக்கம். அன்று வட்டிலைத் தயாராக வைத்துக்கொண்டு மாணிக்கவாசகருடைய சிவபுராணம் பாடிக் கொண்டிருப்போம். குக்கரைத் திறந்து பார்த்தால் அரிசி அப்படியே இருக்கும். பிறகு மாணிக்கவாசகருக்கு யோகம்தான். சாதம் தயாராகும் வரை சிவபுராணம் பாடிக் கொண்டே இருப்போம். அதன் பலனாகப் பழைய சோற்றுக்குப் பதிலாக சுடுசோறே கிடைத்துவிடும்”.
தூரன் பதிவு செய்துள்ள இந்நிகழ்வு வித்யாலயத்தின் உணவு நடைமுறையைச் சொல்வதோடு தாங்கள் உண்ணும் உணவைத் தாங்களே தயார்செய்து கொள்ளும் மாணவர்களின் பண்பையும், தமிழில் சிவபுராணம் பாடியே வித்யாலயத்தில் உணவு பரிமாறப்பட்டுள்ளதையும் வெளிப்படுத்துகிறது.
நினைவுக் குறிப்புகள் தானே என்று சிலவற்றை எளிதாகக் கடந்துபோக முடியாது; கடந்துபோகக் கூடாது. அவை வரலாற்றுச் செல்வங்களாகவும் இருக்கலாம் என்பதற்கு ம. ப. பெரியசாமித் தூரனின் நினைவுக் குறிப்புகள் தக்க சான்று. தன்வரலாறாக இல்லாமல் ஒரு நிறுவனத்தின் வரலாறாக, தமிழகத்தின் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல், மொழி வரலாறாகத் தூரனின் நினைவுக் குறிப்புகள் உள்ளன.
1980ஆம் ஆண்டிற்குப் பிறகு தூரன் பெரிதும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில் அவர் தம் உள்ளத்தில் எழுந்த நினைவுகளை உடனிருந்தோரிடம் சொல்லிப் பதிவு செய்தார். அந்த நினைவுக் குறிப்புகளை, சிற்பி பாலசுப்பிரமணியம் திரட்டி சாகித்திய அகாதெமி பதிப்பகத்தின் வாயிலாக “ம.ப. பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் நூலாகப் பதிப்பித்தார். எதிர்வரும் தலைமுறையினருக்கு ஓர் ஆற்றல்மிகு தமிழாளுமையை அறிமுகம் செய்துவைத்த சிற்பி அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
( வித்யாலய நினைவுகள் தொடரும் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment