பக்கங்கள்

பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்

இதழ் - 170                                                                                     இதழ் - ௧0
நாள் : 17 - 08 - 2025                                                                   நாள் :  - ௨௦௨
 


பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்

வித்யாலய நேர்ச்சை
     
    பெரியசாமித் தூரன் அவர்கள் சிறுவயது தொட்டே இலக்கிய வாசிப்பிலும் கவிதை புனைவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரிக் காலத்தில் வனமலர் சங்கம் அமைத்து இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டும் பிறரை ஈடுபடுத்தியும் வந்தார். பித்தன் என்னும் இதழை நடத்தினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான திரு.வி.கல்யாணசுந்தரனாரின் அச்சுக் கூடத்தில்தான் பித்தன் அச்சிடப்பட்டது. தமிழிசையிலும் பேரார்வம் கொண்டவர். அப்படிப்பட்டவர் கோபிசெட்டிபாளையம் வைரவிழாப் பள்ளியிலிருந்து கோயம்புத்தூர் ராமகிருஷ்ண வித்யாலயத் தொண்டிற்கு வந்த பிறகு தனது இலக்கியப் பணியைப் பற்றிய கவனத்தைத் தெரிந்தே விட்டுக்கொடுத்துள்ளார். காரணம் வித்யாலயத்தின் கொள்கையின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு. அதுமட்டுமல்ல வித்யாலயத்திற்குத் தன்னை முழுமையாகக் கொடுத்து உழைப்பதே நாட்டுத் தொண்டு என்பது அவரது எண்ணமாக இருந்துள்ளது. இலக்கியப் பணி வித்யாலயப் பணியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பிவிடுமோ என்ற எண்ணமும் சேர்ந்துகொண்டதால் அவர் எந்த இலக்கியப் படைப்பாளியும் செய்யத் துணியாத செயலைச் செய்தார்.

    வித்யாலயத்திற்கு உழைக்கும் பொருட்டு பெரியசாமித் தூரன் ஐந்தாண்டு காலம் இலக்கியப் படைப்பிலிருந்து விலகியிருந்தார். கதை, கட்டுரை, கவிதை என்று பத்திரிகைகளில் எழுதி வந்தவர் அதையும் துறந்தார். நண்பர்கள் சொல்லிப் பார்த்தனர் கேட்கவில்லை. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலையோசை போன்ற வரலாற்றுப் புனைவுகளை அளித்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூரனின் நண்பர். அவர் இத்தகைய கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் இதனால் படைப்புலகில் அவரது பெயர் பின்தள்ளப்பட்டுவிடும் என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயனில்லை. தூரன் வித்யாலயமே தன் வாழ்வாக ஆக்கிக் கொண்டு வாழ்ந்தார். வித்யாலயம் வளர்ந்து.  இலக்கியத்தோடு தான் கொண்டிருந்த அறிவிலக்கம் வித்யாலய வளர்ச்சியில் நல்ல பயன்களை அளித்தது என்று இதனை அவர் நினைவு கூர்கிறார். 

     இயல்பாகவே இலக்கியப் படைப்புத் திறனும் தூண்டுதலும் கொண்டிருக்கும் ஒருவர் அதனைவிட்டு விலகியிருத்தல் என்பது அவர்கொள்ளும் மாபெரும் துயரங்களுள் ஒன்று. தன்னுயிரைப் போக்கிக் கொள்ள பழங்காலத்தில் வழக்கத்திலிருந்த வடக்கிருத்தல் போன்ற விரதங்களுக்கு நிகராக இதனைக் கூறலாம். அத்தகைய மாபெரும் துயரை தூரன் அறிந்தே துய்த்தார். தமிழுலகத்தின் நல்லூழ் அவர் விரைவில் மாபெரும் தமிழ்ப்பணியை மேற்கொள்ள வித்யாலய நிறுவனராலேயே சென்னைக்கு அழைக்கப்பட்டார்.

வித்யாலய நினைவுகள் தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment