இதழ் - 178 இதழ் - ௧௭௮
நாள் : 12 - 10 - 2025 நாள் : ௧௨ - ௧௦ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 178
' ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும் '
விளக்கம்
ஒருவனுடைய குடிப்பிறப்பின் சிறப்பு ஒரு போதும் அவனை விட்டு மாறாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
' ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும் '
ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.
இங்கு ஒப்புரவு என்பது உயர்ந்தோர் மேற்கொண்ட நெறிப்படி நடத்தல் ஆகும்.
நல்ல வலிமையான எருதுக்குப் பிறந்த ஒரு கன்றானது, வளர்ப்பவனால் சரியாக பராமரிக்கப் படாமல் இருந்தாலும் அக்கன்றுக்குக் கிடைத்த புல்லை மேய்ந்து, நல்லதொரு வலிமையான எருதாகி விடும்.
அது போலவே, நல்ல குடியிலே பிறந்த சான்றாண்மை உடைய ஒருவன், தான் தேடித் தொகுத்த சிறந்த பொருள்கள் ஏதும் தன்னிடத்தில் இல்லை என்றாலும் தன் குடிப்பண்பின் காரணமாக பிறருக்கு உதவி செய்பவனாகவே இருப்பான் என்பதைக் குறிக்கவே 'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment