இதழ் - 146 இதழ் - ௧௪௬
நாள் : 23 - 02 - 2025 நாள் : ௨௩ - ௦௨ - ௨௦௨௫
சோழ மன்னனான கரிகால் பெருவளத்தானின் மகளான ஆதிமந்தி, வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அத்தியின் மனைவி ஆவார். இவர் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். ஆதிமந்தியாரின் வரலாற்றை பாணரும் வெள்ளிவீதியாரும் ஔவையும் பாடியுள்ளனர். அதுமட்டுமின்றி, இளங்கோவடிகள் 'கற்புடை மகளிர் எழுவரில் கண்ணகியுடன், ஆதிமந்தியாரையும்' சிலப்பதிகாரத்தில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதிமந்தியார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. தலைவி இதுகாறும் வெளிப்படுத்தியிராத தன் காதல் ஒழுக்கத்தைப் பாடுவதாக அமைந்துள்ள பாடலில்,
புதுப்புனலில் தொலைந்த அத்தியைத் தேடி காவிரிக்கரையோரம் செல்லும் ஆதிமந்தி அங்கு மற்போரும், துணங்கைக் கூத்தும் ஆடுபவர்களிடத்தில் "என் காதலன் அத்தியும் துணங்கைக்கூத்து ஆடுபவன், நானும் ஆடுபவள். என் கைவளைகள் கழன்று உகும் வண்ணம் அவன் இப்புதுப்புனலில் சென்று மறைந்தான். அவனை எங்கும் காணவில்லை" எனத் துக்கத்தைப் பகிர்வதைக் காணலாம்.
பாடல்வழி அறிய வரும் செய்திகள். . .
புதுப்புனல் விழா
காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வாழ்ந்த மக்கள், அவ்வாற்றில் புதுவெள்ளம் வரும்போது புனல்விழாக் கொண்டாடுவர். விழாவில் ஆற்றலை நிரூபிக்கும் பொருட்டு ஆண்கள் அவ்வாற்றில் குதித்து எதிர் நீச்சல் அடித்து ஆடி மகிழ்வர். ஆற்றின் கரைகளிலிருக்கும் அரண்மிக்க இடங்களிலிருந்து மக்கள் அதனைக் காணுவர். முழவொலியும், ஆரவாரங்களும் நிறைந்த விழா.
துணங்கைக் கூத்து
(வட்டமாக நின்று கை கோர்த்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்) ஆடவரும், மகளிரும் துணங்கைக் கூத்தும் ஆடி மகிழ்கின்றனர்.
காலார்பெருந்துறை
கடற்கரைக்கு அருகில் காவிரிப்பூம்பட்டினத்திற்கு ஐந்து அல்லது ஆறுகல் தொலைவில் இருக்கும் காலார்பெருந்துறை என்ற ஊரில் நடக்கும் புதுப்புனல் விழாவைப்பற்றிய செய்யுள். அவ்வூரில் காவிரியாறு மிகுந்த ஆற்றலோடு கரைகளை அழிக்கும் வண்ணம் கிழக்கு நோக்கி ஓடும். இருப்பினும் அங்குள்ள மருத மரங்கள் அழிவுறாமல் செறிந்து வளர்ந்த ஊர்.
ஆற்றுப்புனலின் ஆற்றலை எதிர்க்கும் ஆற்றல் அற்றுப்போகும் போது புனல் வழியே சென்று கரை மீள்வதே அறிவுடையோர் செயல்.
சங்ககாலப் பெண்கள் பாடல்களை பாடும் வல்லமையுடன் புலவர்களாக இருந்துள்ளமையை அறிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தை மையமாகக் கொண்டு "ஆட்டனத்தி ஆதிமந்தி" நாவலை கண்ணதாசன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment