இதழ் - 111 இதழ் - ௧௧௧
நாள் : 10-06-2024 நாள் : ௧0-0௬-௨௦௨௪
சங்ககால ஔவை (கி.பி 2)
.ஒரு சமயம், அதியனின் அரசசபையில் அதியனைப் புகழ்ந்து, பாணர்கள் பாடி ஆடுகிறார்கள். அதில் ஔவையும் அதியனைப் புகழ்ந்து பாடுகிறாள். அனைவருக்கும் பரிசினை ஈந்த அதியன் ஔவைக்குப் பரிசில் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். சில நாட்கள் பொறுத்து இருந்த ஔவை ஒருநாள் வாயில் காவலனிடம் சென்று அதியனைக் காண வேண்டும் எனக் கேட்கிறாள். அனுமதி மறுக்கப்படுகிறது; அதியனுக்கோ ஔவையைப் பிரிவதற்கு விருப்பமில்லை; அவளது பாடல்களில் காணப்படும் தமிழ்ச் சுவையினை அவன் விரும்பிச் சுவைப்பான்; பரிசில் கொடுத்தால் உடனே சென்று விடுவாள் என்பதற்காகக் காலம் கடத்துகிறான்; இதனை அறிந்து கொள்ளாத ஔவை தன்னை அதியன் அவமானப்படுத்தி விடுவதாக எண்ணிக் கோபம் கொள்கிறாள்; அப்போது அவள் பாடிய பாடலுக்கான (புறநானூறு, 206) பொருள் வருமாறு. ” வாயில் காப்பவனே! நான் இத்தனை முறை கேட்டும் நீ என்னை அதியனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. காலத்தை வீணாகக் கழித்தவண்ணம் இங்கு என்னால் இருக்க முடியாது. ஆகவே நான் என் யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு செல்கிறேன். அடுத்ததாக ஔவை கூறும் உவமை மிகவும் சிந்திக்கத்தக்கது. அதாவது திறமையுள்ள தச்சச் சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். நான் எங்கு சென்றாலும் அங்கே சோறு (பரிசில்) கிடைக்காமல் போகாது என்கிறாள்.
திறமையுள்ள தச்சச் சிறுவர்கள் என்பது கற்றலுடன் கூடிய உலக அறிவையும் பட்டறிவையும் கொண்டிருத்தல் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கற்றறிந்தவர்களாகவும் உலக அனுபவம் வாய்ந்தவர்களாகவும் திறமையும் இருந்தால் நம்மால் எங்கு சென்றாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஔவை நமக்குக் கொடுத்திருக்கிறாள்.
'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற பிற்கால ஔவையின் வாக்கிற்குச் சங்க கால ஔவையே அடித்தளம் அமைத்துள்ளாள் என்பது தெளிவு .
(வரும் கிழமையிலும் ஔவை வருவாள்…)
இவ்வகைச் சிறப்பு வாய்ந்த புலவர்கள் பற்றி வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment