இதழ் - 172 இதழ் - ௧௭௨
நாள் : 31 - 08 - 2025 நாள் : ௩௧- ௦௮ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 171
' ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு '
விளக்கம்
ஒருவனைக் கெடுக்க முயன்று முடியாமல் போக அவனுடன் நண்பராக முயல்பவர், என்றும் அந்தக் கெட்ட எண்ணத்துடனேயே இருப்பார்கள். அவர்கள் தொடர்பு அறவே கூடாதென்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்
மெலிந்தொருவர் வீழாமைகண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்!
'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு'.
ஒருவன் தன் நண்பன் ஒருவனை கெடுப்பதற்கு நாள்தோறும் சென்றான். ஆனால் அவன் எத்தகைய கெடுதல் செய்யுனும் தளர்ச்சியுற்று வீழ்ந்து விடாமல் இருப்பதைக் கண்டு பொறாமை கொள்கிறான். பின்னா், அவனோடு மிகவும் நட்புடையவனாகச் சென்று பழகிச் சேர்ந்தான். இப்படிச் சேர்வது அம்பினால் எய்து ஒருவனைக் கொல்ல முயன்றவன், எய்யப்பட்டவன் அதற்குத் தப்பிவிட, அவனைப் பின்னர் தனக்குக் காவலாகக் கொள்வது போன்றது என்பதைக் குறிக்கவே 'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment