பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - அறிமுகம்

இதழ் : 1                                                                           இதழ் :
நாள் : 1-5-2022                                                               நாள் :
-ரு-௨உஉ

தமிழில் தோன்றிய அறநூல்களுள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிந்த நூல் உண்டென்றால் அது ஆத்திசூடி ஆகும். தமிழ்மொழியின் எழுத்துநிரல் அடிப்படையில் அறக்கருத்துகளை எளிமையாகச் சொல்லும் அமைப்புடையது ஆத்திசூடி. தமிழ் எழுத்துலகில் பலர் ஆத்திசூடியை எழுதியுள்ளனர். ஔவையார், பாரதியார் போன்றோர் எழுதிய ஆத்திசூடி நூல்கள் குறிப்பிடத்தக்கவை; புகழ்பெற்றவை.

சிறுவர்களுக்குப் பள்ளிப்பருவத்திலேயே பாடமாக வைத்துக் கற்பிக்கப்படும் நூல்களுள் ஆத்திசூடி முக்கிய இடம் பெறுகின்றதுஆத்திசூடியின் பெருமையை நாம் நன்கு அறிந்துள்ளோம். காரணம் அதன் வாசிப்பு எளிமையும் அதன் கருத்துச் செறிவும் ஆகும். அவ்வகையில் ஆத்திசூடியின் பெருமையை விளக்கும் விதமாகப் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆத்திசூடி சிந்துஆத்திசூடி திறவுகோல் என்பன சில.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உலவிக் கொண்டிருந்தபொழுது இராமபாரதி என்பவரால் இயற்றப்பட்ட ஆத்திசூடி வெண்பா” என்னும் நூலைக் காணும் வாய்ப்பமைந்தது. தரவிறக்கி வாசித்துப் பார்த்தேன். ஆத்திசூடியின் கருத்துக்களைக் கதைகளின்வழி விளக்கும் வகையில் அமைந்திருந்தது அந்நூல். வாசிக்க எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது.

தொண்டை நாட்டின் ஊர்களுள் ஒன்று பாகை. அந்த ஊரில்  கணபதி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மகனார் 'புன்னைவனநாதன்' என்பவர் வள்ளல் தன்மையர். அவரைப் போற்றி அவருக்கு ஆத்திசூடியை உணர்த்தும் விதமாக இயற்றப்பட்டதுதான் ஆத்திசூடி வெண்பா. இதை எழுதியவர் இராமபாரதி என்பவர். 

 

பாரோர் புகழிராம பாரதிசெம் பாகமதாய்ச்
சீராத்தி சூடிச் செழுந்தமிழைச் - பேராக
நாகரிகன் புன்னைவன நாதமகி பன்புனைந்தான்
வாகுவினிற் கீர்த்தி வர”

என்னும் வெண்பா இந்நூல் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.  இவரைப் பற்றிய வேறு எந்தச் செய்தியும் தெரியவில்லை. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தரவிறக்கிய ஆத்திசூடி வெண்பா நூலின் முன்னுரையில் இவர் வேதியராக இருக்கலாம் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் ஊகிக்கப்பட்டுள்ளது. பாரதி எனும் பட்டப்பெயர் வேதியர்க்கு வழங்கப்படுதல் பற்றி இவரொரு வேதியரென்று கொள்வாருமுளர்” என்பது முன்னுரை தரும் குறிப்பு. 

ஆத்திசூடி வெண்பா, யாப்பால் வெண்பா வடிவினது. நான்கடி கொண்ட பாடலில் இறுதியடி ஔவையாரின் ஆத்திசூடியடியாக அமைந்துள்ளது. முதல் மூன்றடிகள் அந்த ஆத்திசூடி டியை விளக்கும் கதையாகவோ செய்தியாகவோ அமைந்துள்ளன. இவ்வமைப்பில் தமிழில் சில நூல்கள் உள்ளன. முன்றுறையரையனாரின் பழமொழிநானூறு, சிவஞான முனிவரின் சோமேசர் முதுமொழி வெண்பா என்பன சில சான்றுகள். 

ஆத்திசூடி வெண்பாவை முதன்முதல் அச்சிற் கொணர்ந்தவர் சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவர் புதுவை ஸ்ரீ இராஜகோபால முதலியார் என்பவர் என்பதை 1905 ஆம் ஆண்டு இந்நூலைப் பதிப்பித்த மதுரை புதுமண்டபம் புக் ஷாப் வி.என். இராகவக்கோனார் தனது நூலின் முகப்பு அட்டையில் குறிப்பிட்டுள்ளார். புதுவை ஸ்ரீ இராஜகோபால முதலியாரின் பதிப்பைக் கொண்டே தான் இந்நூலை ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலையில் பதிப்பித்ததாக இராகவக்கோனார்  கூறியுள்ளார்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்திலுள்ள ஆத்திசூடி வெண்பா இலங்கையில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள கொக்குவில் என்னும் ஊரில் இ. சிவராமலிங்கையரால் சோதி பிரகாச யந்திர சாலையில் அச்சிற் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இந்நூல் தெல்லிப்பழை இ. முத்துக் குமார சுவாமிக் குருக்களால் பரிசோதிக்கப்பெற்று அச்சேறியுள்ளது.

 

மதுரைப் பதிப்பு - முதற்பதிப்பு பற்றிய குறிப்புடை அட்டை  

 

ஆத்திசூடி வெண்பா பாடல்கள், ஔவையின் ஆத்திசூடி அடிகளுக்குச் சில புராண வரலாற்று நிகழ்வுகளைச் சான்றாக எடுத்துக்காட்டி விளக்குகின்றன. அவற்றைச் சுருக்கமாக மூவர் உரைநடையில் எழுதியுள்ளனர். சில பாடல்கள் கூறும் நிகழ்வுகள் என்னவென்று விளங்காத காரணத்தால் அதனை அப்படியே பதிப்பித்துள்ளதாக நூல் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.

கதையெழுதிய மூவர்,

1.  நல்லூர் பிரமஸ்ரீ. பண்டிதர் வே. கனகசபாபதியையர்

  ( கநகசபாபதியையர் என்பது பதிப்பு )

2. சுன்னாகம் ஆ. குமாரசுவாமிப் புலவர்

3. தெல்லிப்பழை இ. பாலசுப்பிரமணியையர் ஆகியோர் ஆவர்.

இங்கு, நல்லூரும், சுன்னாகமும், தெல்லிப்பழையும் இலங்கையிலுள்ள ஊர்கள். 

             சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் 

இலங்கைப் பதிப்பின் பதிப்பாண்டு பிலவ வருடம் ஆடிமாதம் என்றுள்ளது. இணையத்திலுள்ள பிலவ ஆண்டு அட்டவணையில் 1841 - 1842, 1901 - 1902, 1961 - 1962 என்று அறுபதாண்டுக் கணக்குப் பட்டியல் உள்ளது. சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் 1854 முதல் 1922 வரை வாழ்ந்தவர் என்று அறியவருவதால் இந்நூல் 1901 ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பது கருதமுடிகிறது. 1905ஆம் ஆண்டின் மதுரைப் பதிப்பு புதுவை இராஜகோபால முதலியாரின் முதற்பதிப்பிற்கிணங்க பதிப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்புள்ளதால் இந்தப் பதிப்பும் வழக்கத்தில் இருந்திருக்கலாம். 

இலங்கைப் பதிப்பு - முகப்பு அட்டை

தெல்லிப்பழை முத்துக்குமாரசுவாமிக் குருக்களால் பதிப்பிக்கப்பட்ட ஆத்திசூடிவெண்பாவை நல்லூர் பிரமஸ்ரீ. பண்டிதர் வே. கனகசபாபதியையர், சுன்னாகம் ஆ. குமாரசுவாமிப் புலவர், தெல்லிப்பழை இ. பாலசுப்பிரமணியையர் ஆகியோர் எழுதிய கதைகள், செய்திக் குறிப்புகளோடு பதிவிட்டால் ஆத்திசூடி கருத்துகளைத் தெளிவதோடு ஆத்திசூடி வெண்பா நூல் குறித்தும் அறிந்துகொள்ள ஏதுவாகும் என்பதால் இதனை விளக்க முற்படுகிறோம்.

 

( தொடர்ந்து சிந்திப்போம்… )
 

No comments:

Post a Comment