இதழ் - 83 இதழ் - ௮௩
நாள் : 26-11-2023 நாள் : ௨௬-௧௧-௨௦௨௩
புணர்ச்சி
புணர்ச்சி
இரண்டு சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வருவது புணர்ச்சி எனப்படும். இரண்டு சொற்களில் முதலில் உள்ள சொல் நிலைமொழி ஆகும். இரண்டாம் சொல் வருமொழி. நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வரு மொழியின் முதல் எழுத்தும் இணைவது அல்லது சேர்வது புணர்ச்சி எனப்படும்.
“மெய்உயிர் முதல் ஈறுஆம் இருபதங்களும்,
தன்னொடும் பிறிதொடும், அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி, நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே”
(நன்னூல், நூற்பா. எண்.151)
சான்று
- வாழை + மரம் = வாழைமரம்
- வாழை என்னும் சொல் நிலைமொழி.
- அடுத்து வரும் மரம் என்னும் சொல் வருமொழி.
புணர்ச்சி வகைகள்
1 . இயல்பு புணர்ச்சி
2. விகாரப் புணர்ச்சி
நிலைமொழி என்றால் நிற்கும் சொல் என்று பொருள். வருமொழி என்றால் நிலைமொழிக்குப் பின்வருகின்ற சொல் என்று பொருள். தொல்காப்பியர் நிலைமொழி என்பதை நிறுத்த சொல் என்றும், வருமொழி என்பதைக் குறித்து வரு கிளவி என்றும் குறிப்பிட்டுள்ளார். மொழி, கிளவி, சொல் என்பன ஒரே பொருளுடைய சொற்கள் என முன்னரே பார்த்தோம். தற்கால தமிழ் இலக்கணத்தில் நிலைமொழி, வருமொழி என்பனவே வழக்கில் உள்ளன.
சான்று
- மண் + வெட்டி = மண்வெட்டி
- செடி + கொடி = செடிகொடி
- கொடி + மரம் = கொடிமரம்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment