இதழ் - 33 இதழ் - ௩௩ புத்தூர்
நாள் : 11-12-2022 நாள் : ௧௧ - ௧௨ - ௨௦௨௨
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
மருதநிலத்தில் புதிதாக உருவான ஊர்கள் புத்தூர் எனப் பெயர் பெற்றிருந்தன. தேவாரப் பாடல் பெற்ற தலம் ஒன்று திருப்புத்தூர் எனப் பெயர் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அரிசில் ஆற்றங்கரையில் உருவான ஊர் அரிசிக்கரைப் புத்தூர் என்றும் கடுவாய் நதிக்கரையில் உள்ள ஊர் கடுவாய்க்கரைப் புத்தூர் என்றும் தேவாரம் குறிப்பிடுவதை அறியமுடிகிறது. பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் வைணவர் போற்றும் பெரிய ஊராகும். சுந்தரர் பெருமான் திருமணம் செய்வதற்காக சென்ற ஊர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆயிற்றென்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. கொங்கு நாட்டில் பழைய பேரூருக்கு அருகில் கோவன் என்னும் தலைவன் பெயரால் எழுந்த ஊர் கோவன்புத்தூர் என்று பெயர் பெற்றது. அதுவே இப்போது கோயம்புத்தூர் என்ற பெயர் பெற்று சிறப்புற்று விளங்குகின்றது.
புலியூர்
விலங்கு வகைகளுள் புலியின் வீரத்தைப் பண்டையத் தமிழர்கள் வியந்து பாராட்டி வந்துள்ளனர். இவ்விலங்கின் பெயர் கொண்ட ஊர்கள் மருத நிலத்தில் பல அமைந்துள்ளன. புலியூர், பாதிரிப் புலியூர், எருக்கத்தம் புலியூர் முதலிய ஊர்கள் பாடல்கள் பெற்ற தலங்களாக அமைந்துள்ளன. இன்னும் திருச்சி நாட்டில் பெரும்புலியூர் என்பது பெரும்பாலூர் என்றும், குறும் புலியூர் என்பது குறும்பலூர் என்றும் இக்காலத்தில் வழங்கப் படுகின்றன. மாயவரத்துக்குத் தெற்கே சிறு புலியூர் என்ற ஊர் அமைந்துள்ளது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment