பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 32                                                               இதழ் -
நாள் : 04-12-2022                                                  நாள் : 0 - - ௨௦௨௨ 

 

 
பழமொழி – 32

ஆகுமோ நந்துழுத எல்லாம் கணக்கு?

     நிலத்தின் மீது  ஊர்ந்து செல்லும்  நத்தைக்   கீறலை எவ்வாறு உழவிற்கு இணையாகக் கொள்ள முடியாதோ அதைப்போலவே திறமையற்ற ஒருவன் செய்யும் எத்தகையச் செயலும் பயனற்றது என்பது இப்பழமொழியின் விளக்கமாம்.
 
     தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
     வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
     மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
     நந்துழுத எல்லாம் கணக்கு?'

     திறமை கொண்ட ஒருவனிடம் கொடுக்கும் பணியை அவன் செவ்வனே செய்து முடிப்பான். அத்தகைய செயலைத் திறமையற்ற ஒருவனிடம் கொடுத்தால் அது பயனற்றுப் போகும். இதனையே  நிலத்தில் ஊர்ந்து செல்லும் நத்தையின் கீறலை எவ்வாறு உழவிற்கு இணையாக கொள்ள முடியாதோ அதைப்போலவே திறமையற்ற ஒருவனிடம் கொடுக்கும் பணியும் பயனற்றுப் போகும் என்றும் அதைக் கணக்கில் கொள்ளவும் முடியாது என்பதையும் ”ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு ” என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இதனை வள்ளுவர்,
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்      
                              - குறள் 517
 
     என்னும் குறளில் இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment