பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 31                                                                இதழ் -
நாள் : 27-11-2022                                                   நாள் : ௨௭ - ௧௧ - ௨௦௨௨
 
   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
பேரேரி
     பெரிய ஏரிகள் பேரேரி என்று பெயர் பெற்றன. பேரி என்பது பேரேரி என்பதன் சிதைவாகும். மருதநிலத்தில் இன்றும் பேரி என்னும் சொல்லை இறுதியாவுடைய ஊர் பெயர்கள் சில உள்ளன. 
 
     நெல்லை நாட்டில் சீவலப்பேரி, கண்டியப்பேரி, அலங்கராப்பேரி, விசுவநாதப்பேரி முதலிய பேரிகள் உண்டு. இதற்குச் சான்று சாசனங்களில் காணப்படுகின்றன.
 
     மதுராந்தகன் என்னும் மன்னன் உருவாக்கிய பேரேரி மதுராந்தகப் பேரேரி என்றும், ஆர்க்காட்டில் சுந்தரசோழன் கட்டிய ஏரி சுந்தரசோழப் போரேரி என்றும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன.
 
சீவலப்பேரி
     திருநெல்வேலியிலுள்ள சீவலப்பேரியின் பழம்பெயர் முக்கூடல் என்பதாகும். அஃது அவ்வூருக்கு இயற்கையாக அமைந்த பெயர். பிற்காலத்தில் ஸ்ரீ வல்லபன் என்னும் பாண்டியன் அவ்வூரில் பேரேரி ஒன்றை உண்டாக்கி, சீவல்லபப் பேரேரி என்று அதற்குப் பெயரிட்டான். அப்பெயர் சிதைந்து இன்று சீவலப்பேரியாக வழங்கப்படுகின்றது.

கண்டியப் பேரி
     கன்னட நாட்டுச் செல்வன் ஒருவன் நெல்லை நாட்டிற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் ஓர் அணைகட்டினான். அதன் நீரைக் கால்வாய்களின் வழியாகக் கொண்டு சென்று பயிர்த் தொழிலைப் பாதுகாத்தான் என்று பழங்கதையொன்று வழங்கப்படுகின்றது. அவ்வாற்றில் மூன்றாம் அணைக்கட்டு, கன்னடியன் அணை என்று இன்றும் வழக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அக்கன்னடியன் நெல்லை நகரத்தின் அருகே பெரியதோர் ஏரியும் கட்டி அதற்குக் கன்னடியப் பேரேரி என்று பெயரிட்டான். நாளடையில் அவ் வேரியும், அதைச் சார்ந்த ஊரும் கண்டியப் பேரி என்று மருவி வழங்கப்படுகிறது.
 
அலங்காரப்பேரி
     அலங்காரப்பேரி என்பது மற்றோர் ஊரின் பெயர். தண்ணீர் பெருகி நிறைந்து தெள்ளிய அலைகள் எழுத்து, அலைந்து வரும் அழகு அலங்காரப் பேரேரி என்னும் பெயரிலே விளங்குகின்றது. இவ்வாறு மருதநிலத்தில் பேரேரி என்னும் பெயர் பல ஊர்களின் பெயர்களாக வழங்கப்படுவதைக் காணமுடிகிறது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment