பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 14                                                                இதழ் - ௧௪
நாள் : 31-07-2022                                                   நாள் : ௩௧-௦௭-௨௦௨௨

    

மகரக்குறுக்கம்

     மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம். 

    ஒரு சொல்லின் ‘ண்’ அல்லது ‘ன்’ என்னும் ஒற்றெழுத்துகள் வந்து அதன் பின் ‘ம்’ என்னும் ஒற்றெழுத்து வருமாயின் அப்போது அது தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி, கால் மாத்திரையாக ஒலிக்கும். இங்ஙனம் மகரம் குறுகி ஒலிப்பதற்கு மகரக்குறுக்கம் என்று பெயர்.

சான்று :
               மருளினும் எல்லாம் மருண்ம்
               திசையறி மீகானும் போன்ம்

     இதில் மருளும் என்பது ‘மருண்ம்’ என்றும், போலும் என்பது ‘போன்ம்’ என்றும் வந்தன. இதுபோல் வகரத்துக்கு முன்வரும் மகரமும் தன் ஒலியளவில் குறைந்து ஒலிக்கும்.

சான்று :
     தரும் வளவன்
     பெரும் வணிகன்
“ண,ன முன் உம் வஃகான் மிசை உம் மகுறுகும்” (நன்னூல் நூற்பா. எண். 96)
 

ஆய்தக்குறுக்கம்

     ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம். 

     ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் ஆகும்.

“லள வீற்றி யைபினாம் ஆய்தம் அஃகும்”   (நன்னூல் நூற்பா. எண். 97)

     எழுத்துகள் புணர்ச்சியின்போது நிலைமொழி ஈற்றில் வரும் ல், ள் என்னும் மெய்யெழுத்துகள் வருமொழியின் முதலில் 'த' கரம் வருமாயின் அவ்விடத்தில் ஆய்தம் (ஃ) தோன்றும். அந்த ஆய்தம் தன்மாத்திரையாகிய அரைமாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

சான்று :
     கல் + தீது = கஃறீது
     பல் + துளி = பஃறுளி
     பல் + தொடை = பஃறொடை

          புணர்ச்சியிலன்றி வழக்கமாகச் சொல்லின் இடையில் வரும் ஆய்தம் அரை மாத்திரையில் ஒலிக்கும்.

சான்று :
     அஃது,   எஃகு
 

( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment